மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், 2024 சுதந்திர தினத்தை முன்னிட்டு, மேலும் மூன்று ஈரநிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிப்பதன் மூலம், இந்தியா தனது ராம்சர் தளங்களின் (சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் எண்ணிக்கையை தற்போதுள்ள 82-லிருந்து 85 ஆக உயர்த்தியுள்ளது என்று கூறினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று ராம்சார் தளங்கள் சேர்க்கப்பட்டதற்கு யாதவ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நமது ஈரநிலங்களை அமிர்த தாரோஹர்கள் என்று அழைப்பதற்கும், அவற்றின் பாதுகாப்பிற்காக அயராது உழைப்பதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியதை இந்த சாதனை பிரதிபலிக்கிறது என்று திரு யாதவ் கூறினார். ராம்சார் தளங்களில் ஈரநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா ஒரு பசுமை இந்தியா என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் யாதவ் கூறினார். இத்துடன் சேர்த்து, நாட்டில் ராம்சார் தளங்களின் பரப்பளவு 1358067.757 ஹெக்டேரைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க கொள்கை உந்துதலுக்கு, இந்த புதிய தளங்கள் ஒரு சான்றாகும். 1971-ல் ஈரானின் ராம்சாரில் கையெழுத்திடப்பட்ட ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்ததாரர்களில் இந்தியாவும் ஒன்றாகும். பிப்ரவரி 1,1982 அன்று இந்தியா இந்த மாநாட்டில் கையெழுத்திட்டது. 1982 முதல் 2013 வரை ராம்சார் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால், 2014 முதல் 2024 வரை, நாடு 59 புதிய ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராம்சார் தளங்கள் (18 தளங்கள்) உள்ளன, அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் (10 தளங்கள்) உள்ளன.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தொடர் சாதனை தமிழ்நாடு வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளையும், நமது திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
With the addition of Nanjarayan Bird Sanctuary in Tiruppur District and Kazhuveli Bird Sanctuary in Villupuram District, our Tamil Nadu now boasts 18 #Ramsar sites.
This continuous achievement reflects the dedicated efforts of the Tamil Nadu Forest Department and the… https://t.co/iiuij8Aqp3
— M.K.Stalin (@mkstalin) August 14, 2024