காதலியால் நண்பனை கொன்ற நண்பன்

சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரின் மகன் ஹரிகரன் (34). இவர் துரைப்பாக்கம் சக்திநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் மேலாளராக புதுச்சேரி பாரதிநகரைச் சேர்ந்த தரணிதரன் (34) என்பவர் வேலை செய்து வருகிறார். ஹரிகரனும் தரணிதரனும் நண்பர்களாக பழகி வந்தனர். தரணிதரன், ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். இந்தத் தகவல் ஹரிஹரனுக்கும் தெரியும். இந்தநிலையில் தரணிதரனுக்கும் அவருக்கும் காதலிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதனால் மனவருத்தத்தில் தரணிதரன் இருந்து வந்தார். இந்தச் சமயத்தில் தரணிதரனின் முன்னாள் காதலி, ஹரிகரனிடம் நட்பாக பேசி வந்திருக்கிறார். அதற்கு தரணிதரன் எதிர்ப்பு தெரிவித்ததோடு தன்னுடைய நண்பனான ஹரிகரனை கண்டித்திருக்கிறார். ஆனாலும் ஹரிகரன், தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு போதையிலிருந்த ஹரிகரன், தரணிதரனிடம் அந்தப் பெண் குறித்து கிண்டலடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த தரணிதரன், தன்னுடைய நண்பன் என்று கூட பாராமல் ஹரிகரனை கையால் தாக்கியுள்ளார். இதில் ஹரிகரன் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிகரன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஹரிகரனின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஹரிகரனைக் கொலை செய்த குற்றத்துக்காக தரணிதரனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Response