ஆளுநர் ஆகிறாரா சரத்குமார்..?

பாஜக ஆட்சி, மத்தியில் மீண்டும் அமைந்துள்ள நிலையில், ஆளுநர் பதவிகளை பிடிக்க பாஜக பிரமுகர்கள் பலரும் போட்டிப் போடுகிறார்களாம்.இந்த போட்டியில், சரத்குமாரும் இடம்பெற்றிருப்பதைதான் யாருமே எதிர்பார்க்கவில்லை.

ஆளுநர் பதவிக்கான போட்டியில், முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், மூத்த பாஜக தலைவருமான, தமிழிசை சவுந்தராஜன் பெயரும் அடிபட்டு வருகிறது.. இதற்கு பின்னணி காரணங்கள் இல்லாமல் இல்லை.

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா கடிந்து கொண்ட எச்சரிக்கை சம்பவத்தை அன்று நாடே கண்டு மிரண்டது.. பொது மேடையில் அமித்ஷாவின் அந்த கண்டிப்பு வெவ்வேறு கோணங்களில் சர்ச்சையை கிளப்பியது.

தென்சென்னை: ஆனால் தென்சென்னையில் போட்டியிட விரும்பிய பாஜக மாநில செயலாளர்களில் ஒருவர்தான், இதற்கெல்லாம் காரணம் என்பது உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு தெரியவந்தது.. அதற்கு பிறகே, தமிழிசை மீது எந்த தவறும் இல்லை என்று உணர்ந்துகொண்ட அமித்ஷா, அண்ணாமலையை தமிழிசை வீட்டுக்கு அனுப்பி சமாதானப்படுத்த சொன்னாராம்.

தமிழிசைக்கே நேரடியாகவே ஃபோன் போட்டு அமித்ஷா பேசியிருக்க முடியும் என்றாலும், அது பாஜக தலைவர்களுக்குத் தெரியாமலே போய்விடக்கூடும் என்பதால்தான், அண்ணாமலையை தமிழிசையை சந்திக்க அனுப்பி வைத்தாராம்.

இப்படிப்பட்ட சூழலில்தான், அமித்ஷாவை சென்று நேற்று தமிழிசை சவுந்தராஜன் சந்தித்துள்ளார்.. தமிழிசை மீது எந்த தவறுமில்லை என்று அமித்ஷாவுக்கு தெரிந்த நிலையில்தான், அவரை டெல்லிக்கு அழைத்து தற்போது பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே அமித்ஷா அழைப்பின் பேரில் தான் டெல்லி சென்றுள்ளார் தமிழிசை.

உள்விவகாரங்கள்: அப்போது பாஜகவின் உள்விவகாரங்கள் குறித்து நிறைய விஷயங்களை அமித்ஷாவிடம் தமிழிசை எடுத்து சொன்னதாகவும் தெரிகிறது. எனினும், இதன் பின்னணியில் ஆளுநர் பதவி குறித்தும் சலசலப்புகள் கிளம்பியிருக்கின்றன. மீண்டும் கவர்னர் பதவிக்கு அடி போடுகிறாரா? என்ற சந்தேகம் வலுக்க தொடங்கியிருக்கின்றன.

அதேபோல, கவர்னர் பதவிக்காக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனும் முயற்சி எடுத்துவருவதாக தெரிகிறது. கடந்த 2019 தேர்தலின்போதே பொன்.ராதாவுக்கு கவர்னர் பதவி தருவதாக ஒரு பேச்சு ஓடியது.

மிஸோரம்: அதாவது, மிஸோரம் ஆளுநராக இருந்த கும்மனம் ராஜசேகரன், அப்போது நடந்த கேரள தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். எனவே, மிஸோராம் ஆளுநராக பொன்.ராதாவை நியமிக்க பாஜக மேலிடம் திட்டமிடுவதாக செய்திகள் கசிந்திருந்தன.

இதற்கு பிறகு, கேரளா ஆளுநராக நியமிக்கலாம் என்றும் 2 வருடங்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன. இப்போதும், இதே போன்ற தகவல், தமிழகத்துக்குள்ளேயே வட்டமடிக்க துவங்கியிருப்பதால், பொன்.ராதாவுக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக சீனியர்கள்: இந்த பாஜகவின் சீனியர்களுக்கிடையே திடீரென போட்டியில் என்ட்ரி தந்துள்ளாராம் சரத்குமார்.. ஏற்கனவே, சரத்குமார், பாஜகவின் மாநில தலைவர் பதவிக்கு முயல்வதாகவும், ஆனால், இவரது கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய கரு.நாகராஜன் போன்றவர்கள் சரத்குமாரை தலைவராக ஏற்பதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் பாஜகவுக்குள்ளேயே சில முணுமுணுப்புகள் ஏற்கனவே வலம்வந்தன.

அதற்கு பிறகுதான், அண்ணாமலை இதில் தலையிட்டு, “நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவர் அல்ல, தேசிய அளவில் வர வேண்டிய தலைவர் ” என்று சொல்லி, பாஜகவுக்குள் சரத்குமாரை கொண்டுவந்தாராம்.

சாத்தியமா: லோக்சபா தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் மண்ணை கவ்வவிட்ட நிலையில், தற்போது சரத்குமார் ஆளுநர் பதவிக்கும் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன.. கட்சியையே கலைத்துவிட்டு பாஜகவில் சேர்ந்த எனக்கு இதுதான் அங்கீகாரமாக இருக்கும் என்று சரத் காய் நகர்த்துகிறாராம். ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை..

காரணம், சரத்குமாருக்கு முன்பாகவே, அவரது நெருங்கிய நண்பர் ராதாரவி பாஜகவில் இணைந்த நிலையில், இதுவரை தனக்கு எந்த பதவியும் தரவில்லை, மரியாதையும் தரவில்லை என்று வெளிப்படையாகவே தன்னுடைய பேட்டிகளில் புலம்பி வரும்நிலையில், சரத்குமாருக்கான எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு பூர்த்தியாகும் என்று தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அதே மாநிலத்தில் ஆளுநராக மாட்டார்கள்.. அப்படியிருக்கும்போது, சரத்குமார் ஆளுநர் பதவிக்கு அடிபோட்டாலும் அது எடுபட வாய்ப்பில்லை என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்…!!!

Leave a Response