ஸ்டேட்டஸால் ஸ்டேட்டஸ்ஸை இழந்த காவலர்

திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். தற்போது மணிமுத்தாறு 9வது அணியில் பணி புரிந்து வருகிறார்.

இவர் களியக்காவிளை எல்லை சோதனைச் சாவடியில் பணியாற்றியபோது, மார்த்தாண்டத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறிய நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் கூறி உள்ளார். அதற்கு தனக்கு சொந்த ஊர் சென்னை, மணிமுத்தாறில் சிறப்பு பணியாக வந்துள்ளேன். என் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்யலாம் என காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் பெற்றோருக்கு என் திருமணத்தில் விருப்பம் இல்லை. உன்னை திருமணம் செய்து கொண்டு வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன். திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் மட்டும் தான் வருவேன் என்று ராஜேஷ் கூறினாராம். அதை நம்பி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று கிராத்தூர் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண்ணின் உறவினரான பெண் போலீஸ் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விட்டு புதுமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை காவலர் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த அந்த மண பெண்ணின் உறவினர் ஒருவர், இவர் என்னோடு போலீசில் வேலை பார்த்தவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே என்று கூறியுள்ளார். இதையடுத்து விசாரித்த போது தனக்கு திருமணம் ஆனதை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி ராஜேஷ் தப்பிச் செல்ல முயன்ற போது பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் ராஜேசை நித்திரவிளை எஸ்.ஐ. சந்திரகுமார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Response