மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வரும் தெலுங்கு பட நாயகன்…

தெலுங்குத் திரையுலகின் நாயகர்களில் சற்று பிரபலமானவர் அல்லு அர்ஜுன். அவருடைய தம்பி அல்லு சிரிஷ் 2013ம் ஆண்டு வெளிவந்த ‘கௌரவம்’ என்னும் திரைப்படம் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அல்லு சிரிஷ், மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ். இப்படத்தினை கமல் போரா(சாந்தி டெலிபிலிம்ஸ்), லலிதா தனஞ்செயன்(போப்தா மீடியா வர்க்ஸ்), மற்றும் பிரதீப் குமார்(தியா மூவீஸ்) ஆகியோர் இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் விஜய் மில்டன்.

தயாரிப்பாளர் s கமல் போரா கூறியதாவது, “இந்தப்படத்தின் மூலம் சிறப்பான பல விசயங்கள் இணைவது எனக்கு பெரு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. விஜய் ஆண்டனியும், விஜய் மில்டனும் இணையும் இப்படம் இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ்க்கு மிகச்சிறந்த ஒன்றாக அமையுமென்று நம்புகிறேன். தற்போது தெலுங்கு திரையுலக பிரபலம் அல்லு சிரிஷ் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் வலு கூட்டியுள்ளது. நாங்கள் கதை கேட்ட கணத்திலேயே இந்தப்படத்தின் நாயக பாத்திரத்தின் வலிமை புரிந்தது. மேலும் அத்துடன் இணைந்திருக்கும் அனைத்து பாத்திரங்களும் கதைக்கு வலு சேர்ப்பதாகவும் படத்தை பரபரவென நகர்த்தி செல்வதாகவும் இருந்தது. அல்லு சிரிஷ் கதாப்பாத்திரம் ஆச்சர்யம் தரக்கூடிய ஒரு பாத்திரமாக இப்படத்தில் இருக்கும். அவர் இந்தப்பாத்திரத்தை ஏற்றது படக்குழுவிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவருடைய சினிமா வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால், அவர் தன் பாத்திரங்களை வெகு கவனமாகவும் தரமான படங்களை மட்டுமே செய்து வருவது தெரியும். இந்தப்படம் அவரது படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இதுவரை இல்லாத பெயரை அவருக்கு பெற்றுத்தரும்” என்றார் தயாரிப்பாளர் s கமல் போரா.

அல்லு சிரிஷ் தனது பாத்திரம் பற்றி கூறியதாவது, “இந்தப்படத்தில் நான் ஏற்றிருக்கும் பாத்திரம் ஒரு அப்பாவி கிராமத்து மனிதன், மற்றும் ஒரு மதிப்புமிக்க குடுமபத்திலிருந்த வந்த மனிதனின் பாத்திரம்”. சற்றே சிரிப்புக்கு பின் ” இதற்கு மேல் சொன்னால் நான் படம் பற்றிய தகவல்களை உளறிவிடுவேன்” என்றார் நடிகர் அல்லு சிரிஷ்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகின்றன, ஷீட்டிங்க் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக கோகர்னா, தியூ – தாமன் ஆகிய கடற்கரை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழிநுடப் கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

Leave a Response