ஞானவேல் சார் தான் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார் – ஜீவி பிரகாஷ்

‘STUDIO GREEN’ சார்பில் K E ஞானவேல் ராஜா மற்றும் ‘Thirukumaran Entertainment’ சார்பில் C V குமார் இணைந்து வழங்க, GV பிரகாஷ் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் திரைப்படம் “ரிபெல்”.

பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் இயக்குநர் பா ரஞ்சித், இயக்குநர் நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் அம்மா சிவா, நடிகர் ஆரி மற்றும் இயக்குநர் கௌரவ் உட்பட பலர் கலந்து கொள்ள, இப்படத்தின் பூஜை நேற்று இனிதே நடைபெற்றது.

பூஜையை தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

இயக்குநர் ரஞ்சித் பேசியதாவது,

“ஞானவேல் சார், CV குமார் சார், புதுசா ஒரு படம் ஆரம்பிச்சிருக்காங்க. இந்தக்கூட்டணி எனக்கு ரொம்ப பிடிச்ச கூட்டணி. ஜீவி சார் நடிக்கிறார். அவருக்கு என் படங்கள் பிடிக்கும், என் படங்கள் பார்த்து பேசுவார். அவருடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில், விரைவில் ஒரு படம் செய்ய பேசிட்டு இருக்கோம். இந்தப்படம் முக்கியமான ஊரின் வரலாறை பேசுவதாக சொன்னார்கள். சிறப்பான படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி” என்று பேசினார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசும்போது,

“பழைய கூட்டணி மீண்டும் இங்கு இணைந்திருக்கிறது. எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று பேச்சிலர் பார்த்தேன், நன்றாக இருந்தது, அடுத்து ஜெயில் படமும் நன்றாக வந்திருக்கிறது. கூழாங்கல் பல விருதுகளை வென்றிருக்கிறது. தமிழ் சினிமா நல்ல பாதையில் பயணிக்கிறது. இந்தப்படமும் அந்த வரிசையில் இணையும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் நன்றி” என்று தெரிவித்தார்.

நடிகர் ஆரி பேசியதாவது,

“ரிபெல் என்கிற தலைப்பு எல்லோருக்கும் பொருந்தாது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஜீவி சாருக்கு பொருந்தக்கூடிய தலைப்பு இது. மக்களுக்கான அரசியலை பேசவுள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி” என்றார்.

இயக்குநர் நிகேஷ் பேசும்போது,

“இது ஒரு அரசியல் படம், ரஞ்சித் சார் திரைப்படங்கள் தான் எனக்கு சினிமா கற்று தந்தது. அவர் இங்கு வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி. இங்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. K E ஞானவேல் ராஜா மற்றும் C V குமார் சாருக்கு நன்றி. இந்தப்படத்தை புரிந்து கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட ஜீவி சாருக்கு நன்றி. சமூகத்திற்கு தேவையான படமாக இப்படம் இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.

தயாரிப்பாளர் C V குமார் பேசும்போது,

“நான் 24 படம் பண்ணிட்டேன். இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளவே, ஒரு தைரியம் வேணும். அது K E ஞானவேல் ராஜா சாரிடம் இருக்கிறது. இது ஒரு அரசியல் கதை, இது எப்படி அமையப்போகிறது என பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தில் நல்ல கூட்டணி அமைந்திருக்கிறது. ஒரு சிறந்த அரசியல் படமாக இப்படம் இருக்கும், நன்றி” என்று கூறினார்.

தயாரிப்பாளர் K E ஞானவேல் ராஜா பேசியதாவது,

“பேச்சிலர் படம் பார்த்தேன், மிகவும் பிடித்தது. படம் ரொம்ப பிரமாதமாக இருந்தது. ஜீவிக்கு வாழ்த்துகள். ரிபெல் கதையை நிகேஷ் சொல்லும்போதே ரொம்ப பிடித்திருந்தது. ஒரு காலேஜ் கதை, அரசியல், தமிழுணர்வு எல்லாம் கலந்திருந்தது. ஜீவி சரியாக இருப்பார் என அவரிடம் சொன்னேன் அவர் கதை கேட்டு, நான் ரசித்த இடங்களை அப்படியே அவரும் ரசித்ததாக சொன்னார். இப்போது ரிபெல் படத்தை ஆரம்பித்திருக்கிறோம். இன்றைக்கு மாலை எங்கள் நிறுவனத்தின் சார்பில் வேறொரு அறிவிப்பும் வருகிறது. இரண்டு படங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை. இந்தப்படம் ஒரு சிறப்பான அரசியல் கதையை சொல்லும். ஆதரவு தாருங்கள் நன்றி” என்று கூறினார்.

நடிகர் ஜீவி பிரகாஷ் கூறுகையில்,

“இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. K E ஞானவேல் ராஜா சார் தான் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தி வெற்றி பெற வைத்தார். ஒரு நடிகனாக எனக்கு ஒரு பிஸினஸை ஏற்படுத்தி நிலை நிறுத்தியவர் அவர் தான். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்வது மகிழ்ச்சி. நாங்கள் இணைந்து செய்த அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இந்தப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிகேஷ் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய ஒரு கதை இதில் இருக்கிறது. அதை நாங்கள் சரியாக சொல்வோம் என்று நம்புகிறேன் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில்,

“K E ஞானவேல் ராஜா சாரே ஒரு ரிபெல் தான். அவருடன் ஜீவி எனும் இன்னொரு ரிபெல் இணைந்து இந்த ரிபெல் படத்தை எடுக்கிறார்கள். இயக்குநர் நிகேஷ் அருமையான திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப்படம் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். பேச்சிலர் படம் பார்த்தேன் ஜீவியின் நடிப்பு அசத்தலாக இருந்தது. ஜெயில் படத்தில் இன்னும் வேறொரு கோணத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்திற்கு பெரும் அர்ப்பணிப்பான உழைப்பை தந்து, தயாரிப்பாளருக்கு பிடித்த நடிகராக வளர்ந்து வருகிறார்” என்று கூறினார்.

Leave a Response