வறுமை ஒழிப்புக்கு ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களின் யோசனை!

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் உள்ள மாறுபாடுகள் குறித்து, சென்னை ஐ.ஐ.டி. மேலாண்மையியல் துறை பேராசிரியர் டாக்டர் லதா தியாராம் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவி, செல்வி.வசந்தி சுரேஷ் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவு, எமரால்டு இன்சைட் (emerald insight (https://doi.org/10.1108/EDI-05-2020-0133) ) என்ற பிரசித்திபெற்ற இதழில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 17 நிறுவனங்களின் தலைவர்களிடம் நடத்திய நேர்காணலில், பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சீரற்ற (உடல்திறன் குறைபாட்டின் தன்மை, வேலைப் பண்புகள், தங்குமிட வசதி, எளிதில் அணுகும்தன்மை மற்றும் வெளிப்புற நிர்பந்தங்கள்) பிரதிநிதித்துவம் நிலவுவதும், சில நிறுவனங்களில், வேலை வழங்குபவரின் (முதலாளியின்) முடிவு, ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

வேலை வழங்குவோரில் பெரும்பாலானோரில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய சேவையில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், வேலைக்கு ஆள் எடுக்கும்போது, உடல்திறன் குறைபாடு உடையவர்களை வேலைக்கு அமர்த்துவது, ஆபத்தானது என்று கருதுவதாகவும் டாக்டர் லதா தியாராம் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அறிவாற்றல் உள்ளவர்களைத் தேர்வு செய்யும் நடைமுறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியிருப்பதுடன், பல்வேறுபட்ட திறமை உடையவர்களைக் கண்டறிவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். உடல்திறன் குறைபாட்டிற்கு (ஊனத்தின் தன்மைக்கு) அப்பாற்பட்டு, திறமை உடையவர்களைக் கண்டறிவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைச் சட்டத்தில், 21 வகையான குறைபாடு உடையவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்ட சில குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவது, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக, ஆராய்ச்சி மாணவி செல்வி.வசந்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி, நீடித்த வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பல்வேறுபட்ட குறைபாடு உடையவர்களையும் முக்கியப் பணிகளில் அமர்த்த ஏதுவாக, உலகளாவிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response