தமிழக வேலை தமிழருக்கே என்ற நிலையை திமுக உருவாக்கும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான 18 பொதுத் துறை நிறுவனங்களில் 90 முதல் 100 சதவீதம் வரை வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டு தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருவதாக சில ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்தது.
அண்மையில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அஞ்சல் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும் ரயில்வே துறையில் தொழில் பழகுனர் பணிக்கு 90 சதவீதம் வடமாநில இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனால் தமிழகத்தில் இருந்து அரசு வேலைக்கு தயார் செய்யப்படும் இளைஞர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து #தமிழகவேலைதமிழருக்கே மற்றும் #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. பலரும் இது தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு அதிமுக, பாஜக அரசு துரோகம் இழைத்து விட்டன.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்குவது கண்டிக்கத்தக்கது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. திருச்சி பொன்மலையில் நடந்த ரயில்வே தேர்வில் தமிழக இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். சென்னை, கோவையில் உள்ள ரயில்வே அலுவலகங்களிலும் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு 2600 வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனத்தில் தமிழர்களுக்கு 96 சதவீதம் முன்னுரிமை உறுதி செய்யப்படும். தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்ற நிலையை திமுக உருவாக்கும் என்று ஸ்டாலின் தனது அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளார்.