“கே 13” திரை விமர்சனம் இதோ..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு K-13 சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி,

திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார். அந்த நேரத்தில் நண்பர்கள் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்ல, அங்கு ஷரதா ஸ்ரீநாத் அறிமுகம் கிடைக்கின்றது.ஷரதா ஒரு எழுத்தாளர், அவருக்கு அருள்நிதி மேல் ஒரு ஈர்ப்பு வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார்.

அடுத்தநாள் காலை அருள்நிதி ஒரு சேரில் கட்டிப்போட்டு இருக்க, ஷரதா தன் கையை அறுத்துக்கொண்டு இறந்துள்ளார். அருள்நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். இதை தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பமே இந்த K-13.

அருள்நிதி தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அந்த வகையில் இதுவும் அவருக்கு ஒரு சிறந்த படைப்பே, படத்தில் அவரின் கதாபாத்திரமே பெரும்பாலும் வருகின்றது. அதனால் எந்த ஒரு இடத்திலும் கவனம் சிதறவிடாமல் அவரின் பதட்டத்தை நம்மிடம் கடத்துகின்றார்.

ஷரதா படத்தின் ஆரம்பத்தில் இறந்து போகின்றார், அதை தொடர்ந்து இடைவேளை வரை அவருக்கு பெரிய நடிக்கின்ற வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவருக்கான காட்சி தொடங்கும் போது ரசிக்க வைக்கின்றார்.

படத்தில் எந்த ஒரு காட்சியையும் முழுமையாக விவரிக்க முடியாது, ஏனெனில் டுவிஸ்ட் உடைந்துவிடும். அதிலும் அட படம் முடிந்துவிட்டது இவ்வளவு தானா? என்று இருக்க, அதை தொடர்ந்து அருள்நிதி பார்வையில் கதை தொடங்க, அட என்னடா இது என்று சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது.

அருள்நிதியிடம் சேர்ந்து நாமும் கவுன்ஸிலிங் சென்றது போல் இருக்க, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.படத்தின் மிகப்பெரும் பலம் சாம் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் படம் முழுவதும் பெரும்பாலும் ஒரு ரூம் என்றாலும், எங்குமே நமக்கு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.

K-13 அருள்நிதி சேரில் கட்டியிருப்பது போல், நம்மையும் படத்தின் சீட்டின் நுனியில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குனர் பரத் நீலகண்டன்.

Leave a Response