ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய ‘கே 13’ டீசர்..!

“இரவுக்கு ஆயிரம் கண்கள்” படத்திற்கு பிறகு  அருள்நிதி புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில்   K13 என்ற புது படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியுடன் சேர்ந்து நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத்  முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானதை அடுத்து, தற்போது இதன் டீசரை இசையமைப்பாளர் அனிருத் தனது  ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

சைக்கோ திரில்லர் பணியில் உருவாகியுள்ள இப்படத்தில் , மன அழுத்தத்தினால் சைக்கோவாக நடந்துக் கொள்ளும் ஷ்ரதாவிடம் சிக்குகிறாரா அருள்நிதி? அப்படியென்றால் எப்படி தப்பித்துச் செல்வார்? என்ற விறுவிறுப்பான கதைக் களம் கொண்டு உருவாகியுள்ளது கே13.

இது குறித்து இயக்குனர் பரத் கூறும்போது, “டீசரை இறுதி வடிவத்துக்கு கொண்டு வர மிகவும் சவாலாக இருந்தது. வேறு பல பதிப்புகளையும் தயார் செய்தோம். என் குழுவுக்கு நன்றி, குறிப்பாக இதை கிரியேட்டிவாக அணுகிய படத்தொகுப்பாளர் ரூபனுக்கு நன்றி. இதற்கு மேல் எதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இது ஒரு திரில்லர் படம் தான், மற்றவற்றை பார்வையாளர்களே பெரிய திரைகளில் பார்த்து அனுபவிக்கட்டும்” என்றார்.

மேலும், இயக்குனர் பரத் நீலகண்டன், சமீபத்தில் படக்குழுவில் இணைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்தையும் டீசரில் வெளிப்படுத்தி விட்டார். அது குறித்து அவர் கூறும்போது ‘நாங்கள் இந்த டீசர் வெறும் ஒரு முன்னோட்டமாக மட்டும் இருப்பதை விரும்பவில்லை, மாறாக கதாபாத்திரங்களை பற்றி சொல்ல முயற்சித்தோம். இப்போதெல்லாம் பார்வையாளர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் படம் பார்க்கும் முன்பு சின்ன கதாபாத்திரங்களை கூட தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நாங்கள் இதை முயன்றோம், இப்போது மக்கள் அந்த கதாபாத்திரங்களை அடையாளம் கண்டு கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

Leave a Response