சிங்கிள் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ‘K13’..!

அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த K13 திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மே 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இந்த படத்துக்கு கிடைத்த ரசிகர்களின் வாய்மொழி விளம்பரத்தால் காட்சிகள் மற்றும் திரையரங்குகள் படிப்படியாக அதிகரித்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக, அண்டை மாநில துரைத்துறையினரிடம் இருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்திருப்பதும், படத்தை ரீமேக் செய்ய அவர்கள் ஆர்வம் காட்டுவதும் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
 
இது குறித்து SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி.சங்கர் கூறும்போது, “இது எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் உள்ளது. ஆரம்பத்தில், K13 போன்ற த்ரில்லர் படத்துக்கு மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கர்களிடம் இருந்து தான் நல்ல ஒரு வரவேற்பு கிடைக்குமென நினைத்தோம். ஆனால், இந்த திரைப்படத்துக்கு புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக அருள்நிதி படம் என்றால் தனித்துவமான விஷயம் ஏதாவது இருக்கும் என ரசிகர்களை தயார்படுத்தி வைத்து, இந்த படத்துக்கு ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமாக இருந்த அருள்நிதிக்கு நன்றி. சினிமா விமர்சகர்களின் நேர்மறையான விமர்சனங்களும், பொதுமக்களின் வாய்மொழி வார்த்தைகளும் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை அதிகரித்து வருகிறது.
பரத் நீலகண்டன் கதையாக என்ன சொன்னாரோ அதை திரையில் கொண்டு வந்து தனது திறமைகளை நிரூபித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவின் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமையை பெற எங்களை அணுகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
 
அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கிய இந்த படத்தை SP சினிமாஸ் சார்பில் எஸ்.பி.சங்கர் மற்றும் சாந்தப்ரியா தயாரித்திருந்தனர். முன்னணி நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்பை தவிர, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு, சாம் சிஎஸ்ஸின் பிரம்மாண்டமான பின்னணி இசை, மற்றும் ரூபனின் கச்சிதமான படத்தொகுப்பு ஆகியவையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Leave a Response