மோடியின் திட்டங்கள் அனைத்தும் ‘வரும் ஆனா வராது’ – ஸ்டாலின் கிண்டல்..!

பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் எல்லாம் வரும் ஆனா வராது என்ற நிலையில்தான் இருக்கிறது என தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில் சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் கருணாநிதி என்றால் அந்த திட்டத்தை வெற்றிகரமாக இயங்க காரணமாக இருந்தவர் தமிழச்சியின் சகோதரர் தங்கம் தென்னரசு. இதே தென் சென்னை தொகுதியில் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே தென் சென்னையானது திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தோம். மோனோ ரயில் திட்டம் தான் வேண்டும் என ஜெயலலிதா சொன்னார். இன்றைக்கு என்ன ஆனது.

நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்கள். மோடியாக இருந்தாலும் சரி எடப்பாடியாக இருந்தாலும் சரி இவர்கள் சாதனைகளை சொல்ல முடியுமா. அப்படி சொல்லத் தொடங்கினால் வேதனைதான் மிஞ்சும். ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார் மோடி.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் 3 தவணைகளாக செலுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் இதுவரையில் ஏதாவது கிடைத்துள்ளதா. அவரின் திட்டங்கள் அனைத்தும் வரும் ஆனா வராது என்ற நிலையில்தான் உள்ளன என்று மு.க.ஸ்டாலின் கிண்டலாக கூறினார்.

Leave a Response