தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!

தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து மதுரை பெரிய ஆலங்குளத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

அப்போது, அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வைத்து வாக்கு கேட்காமல், தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இதுவரை 6 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் 2023க்குள் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார்.

நல்ல திட்டங்களைக் கொண்டுவந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தேர்தலில் மக்கள் நீதிபதிகளாக இருந்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்றார்.

அதே நேரம், எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, 1,000 ஸ்டாலின், 1,000 தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்றும் கூறினார்.

திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இருந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Response