சபரிமலையில் 144 தடை உத்தரவு நாளை வரை நீட்டிப்பு..!

சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு நாளை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போதும் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இதனிடையே சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.கோயிலில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள போலீசார் விதித்துள்ளனர். இதற்கு சபரிமலை செல்லும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரிமலை கோயில் வளாகத்திலும் கூட கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன.

நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டா, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகி ன்றனர். இதனால் சபரிமலையில் 144 தடை விதிக்கப்பட்டது. தடை உத்தரவு இன்று நள்ளிரவில் முடியும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருந்தாலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Leave a Response