மணியார் குடும்பம் – திரைவிமர்சனம்..!

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தம்பி ராமையா இயக்குனராக களமிறங்கியுள்ள படம் இந்த ‘மணியார் குடும்பம்’ என்பதோடு, அவரது மகன் உமாபதியை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்கியுள்ள படமும் கூட! அப்பா – மகன் கூட்டணி சக்சஸ் கூட்டணியாக அமைந்துள்ளதா?

ஒரு காலத்தில் ஊரே போற்றும் விதமாக வசதியாக வாழ்ந்த குடும்பம் தம்பி ராமையாவினுடையது! காலப்போக்கில் நலிவடைந்த இந்த குடும்பத்தில் பொறுப்பில்லாதவராக இருக்கும் தம்பி ராமையா, தனக்கு இருக்கும் ஒவ்வொரு சொத்தையும் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் தந்தையை போலவே எந்த வேலையும் செய்யாமல், பொறுப்பில்லாமல் இருப்பவர்! இந்நிலையில் உமாபதிக்கு அவரது மாமன் ஜெயபிரகாஷின் மகள் மிருதுலா முரளியை திருமணம் பேசி முடிக்க அவர்களது வீட்டுக்குச் செல்ல, ஜெயபிரகாஷ் தம்பி ராமையா, உமாபதி உட்பட்ட அனைவரையும் கேவலமாக பேசி அவமானப்படுத்துகிறார்! இதனால் கோபத்துக்கும், அவமானத்துக்கும் ஆளாகும் உமாபதி, வாழ்க்கையில் சாதித்துக்காட்டி தானே மிருதுலா முரளியின் கழுத்தில் தாலி கட்டுகிறேன்’ என்று சபதம் செய்கிறார்! உமாபதி சபதம் செய்தது மாதிரி செய்து காட்டினாரா? இல்லையா? என்பதே ‘மணியார் குடும்ப’த்தின் கதைக்களம்!

அரதப்பழசான கதைதான்! ஆனால் அதை காமெடி, குடும்ப சென்டிமென்ட், அடிதடி ஆக்‌ஷன் என்று ஓரளவுக்கு ரசிக்கும்படியாக தந்துள்ளார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை ஆகிய பொறுப்புக்களை ஏற்று இயக்கியிருக்கும் தம்பி ராமையா! ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் தங்கள் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பதுபோல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் உமாபதி முன்னுக்கு வர, அவரது மாமன் மகள் மிருதுலா ஊக்கமளிக்கிறார். இதனை தொடர்ந்து தொழில் செய்ய மக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் கடனாக வசூலிக்கும் உமாபதி, ஒரு கட்டத்தில் அந்த தொகையை பறிக் கொடுக்கிறார். அதன் பிறகு அந்த பணத்தை மீட்க உமாபதி மேற்கொள்ளும் போராட்டங்கள், அந்த பணத்தை அடித்து செல்ல காரணமானவர் யார் என்று தெரிய வரும்போது கதையில் ஏற்படும் திருப்பங்கள் என்று ‘மணியார் குடும்பம்’ சுவாரஸ்யமாகவே பயணிக்கிறது.

ஆனால் படத்தில் கதையுடன் ஓட்டாத சில கேரக்டர்கள், திணிக்கப்பட்டது மாதிரியாக வரும் ஓரிரு பாடல்கள் கொஞ்சம் போரடிக்கவும் வைக்கிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் பயணிக்கும் இந்த கதையில் பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அழகோ அழகு! இதுபோன்ற ஒரு கிராமத்து கதை படத்தை பார்த்து வெகு நாட்களாகி விட்டது என்று சொல்ல வைக்கும் விதமாக அமைந்துள்ளது இப்படத்தின் லொகேஷன்களும், அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும்! இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள தம்பி ராமையா, இசையிலும் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்துள்ளார். மொத்தத்தில் தம்பி ராமையாவின் இந்த முயற்சி அவருக்கும், அவரது மகன் உமாபதிக்கும் வெற்றியை தரும் விதமாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

கதாநாயகனாக நடித்திருக்கும் உமாபதியை பொறுத்தவரையில் அவர் தனது முதல் படமான ‘அதாங்கப்பட்டது மகா ஜனங்களே’ படத்திலேயே நல்ல நடிப்பு, நடனம், சண்டை காட்சிகள் என்று தனது திறமையை நிரூபித்திருந்தார். இந்த படத்திலும் அனைத்து விஷயங்களிலும் அசத்தியுள்ளார் உமாபதி! கதாநாயகியாக வரும் மிருதுலாவுக்கு சின்ன கேரக்டர்! நடிப்பு, நடனம் என்று அவரும் உமாபதிக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார். வசதியான குடும்பத்தில் பிறந்து எந்த கஷ்டங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்து வந்த தம்பி ராமையா, ஒரு கட்டத்தில் கஷ்டத்துக்கு ஆளாகி அல்லல்பட்டு கஷ்டப்படும் கேரக்டரில் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். தம்பி ராமையாவின் மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனி, அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, மைத்துனராக வரும் ஜெயபிரகாஷ், அவரது மனைவியாக வரும் மீரா கிருஷ்ணன், ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும் யாஷிகா ஆனந்த் மற்றும் ‘சிங்கம்’ புலி, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, வைரபாலன், சரவண சக்தி என்று படத்தில் நிறைய பேர் நடித்திருக்கிறாரிகள்.


Leave a Response