“இரும்புத்திரை”- விமர்சனம்..!

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது ‘இரும்புத்திரை’ திரைப்படம். டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தைத் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இப்படம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நிகழும் அழிவுகளைச் சொல்லும் ‘இரும்புத்திரை’ ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

வெளிநாட்டுக்குச் செல்வதே லட்சியம் என இருக்கும் ராணுவ அதிகாரி விஷால். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு எதிராக கோபப்படும் துடிப்பான இளைஞன். அவரது கோபமே அவரது வேலைக்கு சிக்கலை ஏற்படுத்த, கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மனநல நிபுணர் சமந்தாவிடம் கவுன்சிலிங்கிற்காகச் செல்கிறார். குடும்ப அமைப்பின் மேல் விஷாலுக்கு இருக்கும் அதிருப்தியை போக்கி அவரை குடும்பப் பிணைப்புள்ள மனிதராக மாற்றுகிறார் சமந்தா.

தங்கையின் திருமணத்திற்காக பணம் தேவைப்பட, பல்வேறு வழிகளிலும் கிடைக்காத பட்சத்தில், வேறு வழியின்றி குறுக்கு வழியில் பணத்தைப் பெறுகிறார் விஷால். வங்கிக் கணக்கில் வரவான பணம் மொத்தமாக ஆன்லைன் ஹேக்கர்களால் துடைத்து எடுக்கப்பட, அதற்குக் காரணமானவர்களைத் தேடிக் களத்தில் இறங்குகிறார் விஷால். ஆன்லைன் ஹேக்கர்களை விஷால் கண்டுபிடித்தாரா, திருடப்பட்ட தனது பணத்தைத் திரும்பப் பெற்றாரா, பாதிக்கப்பட்ட பலருக்கும் அவர் காட்டிய வழி என்ன என்பது ‘இரும்புத்திரை’ படத்தின் மறுபாதி கதை.

ஊழல் பணம், கணக்கில் வராத கறுப்புப் பணம், மோசடியாக பெறப்படும் பணம் ஆகியவற்றைக் குறிவைத்து வழித்தெடுக்கிறது பெரும் ஹேக்கர் நெட்வொர்க். முகம் தெரியாத ஹேக்கர்களின் இந்தச் செயலால் அப்பாவிகள் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு ராணுவ அதிகாரியான விஷால், ஹேக்கர்களைக் கண்டுபிடித்து சைபர் கொள்ளைக்கும், பெரும் குற்றங்களுக்கும் எதிராக அனைத்து மக்களுக்குமான நீதியைப் பெற்றுத்தரப் போராடுகிறார்.

ராணுவ மேஜராக ஆறடி உயர விஷாலின் மிடுக்கு இந்த கேரக்டருக்கு செம கச்சிதம். அழகழகான காட்டன் புடவைகளில், அழகுப் பதுமையாக வருகிறார் சமந்தா. அவரது க்யூட் புன்னகையில் ஆயிரம் வாட்ஸ் பூரிப்பு. அலட்டல் இல்லாத அமைதியான மெச்சூர்ட் நடிப்பைத் தந்திருக்கிறார். அழகால் அசத்தும் சமந்தாவுக்கு படத்தில் நிறைய காட்சிகள் இல்லாதது குறை. காதல் காட்சிகள், டூயட் பாடல் எதுவும் இல்லாதது பெரும் மைனஸ். விஷாலின் அப்பாவாக டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். பிள்ளைக்குப் பயப்படும் அப்பாவாக எமோஷனல் கேரக்டரில் சூப்பர் நடிப்பு. விஷாலின் மாமாவாக ரோபோ ஷங்கர் கிடைக்கும் வெகுசில இடங்களில் கவுன்டர் அடித்திருக்கிறார். சைபர் உலகின் டானாக அர்ஜூன் வில்லத்தனம் காட்டியிருக்கிறார். ஒயிட் காலர் வில்லனுக்கு பொருத்தமான தேர்வு.

யுவனின் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறது. மொத்தப் படத்திலும் முதல் பாதியில் இடம்பெறும் மூன்று பாடல்கள் மட்டுமே. சமந்தா உடனான ‘அழகே அழகே’ பாடலும், ‘ஆங்க்ரி பேர்டு’ பாடலும் படத்தில் இடம்பெறாதது ஏமாற்றம். ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமராவில் விஷாலின் கிராமமும், மாநகர் சென்னையும் அதற்கேயுரிய அழகில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரூபனின் எடிட்டிங்கில் விஷால் – சமந்தா காதல் காட்சிகள் நிறைய கட் ஆகியிருக்கும்போலத் தெரிகிறது. தேவையில்லாத காட்சிகள் என எதுவும் இல்லை என்பது ஆறுதல்.

வங்கிக் கடன் வாங்குபவர்களுக்குப் பின்னே நடைபெறும் பெறும் தகவல் தொழில்நுட்ப சதுரங்க ஆட்டத்தை சிறப்பாகக் காட்டியிருக்கிறார்கள். சாமானிய மக்களைப் பற்றிய தகவல்கள் எந்தெந்த வகைகளில் சைபர் கொள்ளையர்களைச் சென்று சேர்கிறது என விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் எனச் சொல்லலாம். ஆன்லைன் மோகத்தில் வாழும் இந்தத் தலைமுறை இளைஞர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அப்பாவிகளுக்கு நேரும் இத்தகைய பாதிப்புகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் படத்தில் காட்டப்படுகிறது.

‘இரும்புத்திரை’ திரைப்படம், தனி நபர்களின் ஆதார் தகவல்களை இத்தனை எளிதாக திருடும் வகையில் இருப்பது நாட்டு மக்களுக்கு எந்த அளவுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் என உணர வைப்பதோடு டிஜிட்டல் இந்தியா மீதான பயத்தையும் நிச்சயம் அதிகரிக்கும். ஒவ்வொருவரும் எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுவது என முடிவு செய்வது வரை தானே முடிவு செய்ய முடியும் என ஆன்லைன் ஹேக்கிங் உலகின் டான் அர்ஜூன் கூறுவது சமீபத்திய சைபர் தகவல் திருட்டு செய்திகளின் மூலம் நம்பகமானதாகிறது. ஆதார், வங்கிக் கடன் என எல்ளோருக்கும் புரியும் விதமாக சொல்லவேண்டிய விஷயத்தை முதல் படத்திலேயே துணிந்து சொன்னதற்காகவே நிச்சயம் இயக்குநரை பாராட்டலாம். இரும்புத்திரை மொத்தத்தில் இந்தியாவையே பயமுறுத்தும்!

Leave a Response