இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா இணைந்து நடித்த ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் அதிக வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் 4 நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்தப் படத்தை சுந்தர்.சி தமிழில் இயக்க நடிகர் சிம்பு நடிக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இந்தப் படத்தில் மகத், கேத்ரின் தெரேசா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிம்பு, அஜித்துடன் மோத இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.