“அகவன்” – விமர்சனம் இதோ..!

கிஷோர் ரவிச்சந்திரன் நாயகனாகவும், சிராஸ்ரீயும், நித்யா ஷெட்டியும் நாயகிகளாக நடித்துள்ள படம் அகவன்.

மேலும், தம்பி ராமையா, சரண்ராஜ், நரேன், பிரியங்கா, ஹலோ கந்தசாமி, மீராபி, ஆர்.என்.ஆர்.மனோகர், ஆர்.மகாலட்சுமி, மணிக்குட்டி, பாலசுப்ரமணி, வெங்கட் ரமேஷ், வைரபாலன், ஸ்டீபன் செல்வம், அம்பை கார்த்திக், ‘மைனா’ அர்ச்சனா, ஏ.கே.நிதி, எல்.வி.கே.தாஸ், ஆர்.நிர்மல், மாஸ்டர் வி.தனுஷ், பேபி.ஆர்.மாதங்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் கிஷோர் ஒரு கோவிலில் தங்கி அங்கேயே பணியாற்றி வருகிறார். அந்த கோவிலில் ஏதோ சில மர்மமான விஷயங்கள் நடைபெறுகின்றன. அந்த மர்மமான சம்பவங்களுக்கு பேய் தான் காரணம் என நம்பப்படுகிறது. மர்மமான சம்பவங்களில் கிஷோரே சிக்கி கொள்ள அதில் இருந்து அவர் வெளிப்பட்டாரா? மர்மங்களுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? என்பதே கதை.

ரூபாய் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த கிஷோருக்கு நாயகனாக இது முதல் படம். வசன உச்சரிப்பைக்கூட சரியாக செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்.மர்மங்களை தேடிச்செல்லும்போது தன்னுடைய பதற்றத்தையும் ஆர்வத்தையும் ஓரளவு வெளிப்படுத்தி இருக்கிறார்.

சித்ரா ஷெட்டி, நித்யாஸ்ரீ என இரண்டு கதாநாயகிகள். கிஷோரை காதலிப்பது மட்டும்தான் வேலையோ என்று நினைத்தால் இரண்டாம் பாதியில் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு உதவுகிறார்கள்.

தம்பி ராமய்யா படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவருக்கு ‘எங்கே இருந்தோ’ வரும் கவுண்டர் வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. இன்னொரு ஜோடி நரேன், பிரியங்காவும் சிறப்பான அறிமுகங்கள். சி.சத்யாவின் இசையில் ‘அடங்கா குதிரை’ பாடலும், ‘அடியாத்தி’ பாடலும் கேட்க அருமை. பாடல் காட்சிகளும் குளுமை. ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார்கள்.எல்விகே.தாஸ், ஆர்.நிர்மல் இருவரும் கச்சிதமான படத்தொகுப்பால் விறுவிறுப்பாக்கி உள்ளனர்.

பேய் படம் போல தொடங்கி திரில்லராக மாறி, கடைசியில் மிக அவசியமான ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் இயக்குனர். கடைசி 30 நிமிட காட்சிகள் ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. கோவில்கள் கட்டியதற்கான அடிப்படை காரணங்களை விளக்கும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

அரசர்கள் காலத்தில் கோவில்களை எதற்காகக் கட்டினார்கள்..? அது எப்படிப்பட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டது.? அதனுள் எதனை வைத்தெல்லாம் கட்டியிருக்கிறார்கள்..? கட்டப்பட்டதன் சூத்திரம் என்ன..? இதையெல்லாம் நாம் யோசிக்காமல்தான் தினமும் கோவில்களுக்குச் சென்று வருகிறோம். அவை அத்தனைக்கும் இந்த ஒரே படத்திலேயே பதில் சொல்லத் தலைப்பட்டிருக்கிறார் இயக்குநர் ஏழுமலை.

Leave a Response