15 சீட்-அட 10 தொகுதியாவது கொடுங்க-திமுகவிடம் தொடர்ந்து நோஸ்கட் வாங்கும் தேசிய கட்சி..!

தி.மு.கவுடன் நெருங்கி வருவதற்கான வேலைகளில் இறங்கியது அந்த தேசிய கட்சி. ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்தே இதற்கான வேலைகள் நடந்து வந்தன’ என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். ‘ அவர்கள் சொல்வதைக் கேட்டால், நமக்குத்தான் தோல்வி என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததால், அந்த முயற்சி நடக்கவில்லை’ என்கின்றனர் தி.மு.கவினர்.

‘எங்களுடன் அணி சேராவிட்டாலும் பரவாயில்லை. அந்த கட்சியுடன் கூட்டணி சேராமல் இருந்தால் போதும்’ என்ற நிபந்தனையை அந்த தேசிய கட்சி விதித்தது. இதனை ஆமோதிக்கும் வகையில் மூன்றாவது அணிக்கான முயற்சிகளை வரவேற்றுப் பேசினார் ஸ்டாலின்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து கூறியதும் கோபாலபுரம் வீட்டுக்கே சந்திரசேகர ராவ் வந்ததும் நிகழ்ந்தன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே தி.மு.கவுடன் கூட்டணி உறவைக் கடைபிடிக்க விருப்பப்பட்டது அந்த தேசிய கட்சி.

இதுதொடர்பாக, தி.மு.க தலைமையிடம் தூது அனுப்பி வைக்கப்பட்டது, இந்த முயற்சியை துரைமுருகன் உள்ளிட்ட சிலர் வரவேற்றாலும் ஆ.ராசா, பொன்முடி உள்ளிட்டவர்கள் ஏற்கவில்லை. ஒருகட்டத்தில், ‘ 2 எம்.பி சீட் கொடுத்தால் போதும். அடுத்து எங்க கட்சி ஆட்சிக்கு வரும்’ என நெருங்கி வந்தும், தி.மு.கவின் அடுத்தகட்ட தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.

இதற்கடுத்து, இரண்டாவது தூது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நடந்தது. அப்போது ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களை அணுகிய தேசிய கட்சிகளின் புள்ளிகள், ‘ நட்சத்திர வேட்பாளராக களத்தில் நிற்கிறார் தினகரன். பணம், டோக்கன் சிஸ்டம், வலுவில்லாத வேட்பாளர்கள் என கள நிலவரம் அவருக்கு சாதகமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் நீங்கள் கட்டாயம் மோசமான தோல்வியை சந்திப்பீர்கள்.

உளவுத்துறை அறிக்கை அப்படித்தான் சொல்கிறது. நீங்கள் விரும்பினால், இந்தத் தேர்தலை ரத்து செய்கிறோம். அதற்குக் கைமாறாக, ‘ நாடாளுமன்றத் தேர்தலில் 15 சீட் கொடுங்கள்’ எனக் கேட்டுள்ளனர். இதற்கு ஸ்டாலின் தரப்பினர் மறுக்கவே, ‘ பத்து சீட்டுகளையாவது உறுதி செய்யுங்கள்’ என இறங்கி வந்துள்ளனர்.

இப்படியொரு முயற்சியையே ஸ்டாலின் விரும்பவில்லை என திட்டவட்டமாக திமுக தரப்பு கூற நோஸ்கட் வாங்கிச் சென்றதாம் அந்த தேசிய கட்சி.

Leave a Response