அனைவரின் ஆதரவோடு தலைவராகி இருக்கிறேன் : தமிழகத்தை மீட்போம்…ஸ்டாலின் ஆவேச பேச்சு..!

அனைவரின் ஆதரவோடு தலைவராகி இருக்கிறேன், திருடர்கள் கையில் இருந்து தமிழகத்தை மீட்போம் என்று திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலின் பேசியுள்ளார்.

தி.மு.க பொதுக்குழுவில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பேசியதாவது:

கருணாநிதி போல் யாராலும் பேச முடியாது. எதையும் எதிர்கொள்ளும் துணிவு உள்ள ஒருவனாக நான் நிற்கிறேன். கருணாநிதியின் கொள்கை தீபம் நமது உயிர்மூச்சு இருக்கும் வரை இருக்கும். இது நமக்கு முப்படை போல் பலத்தை தந்துள்ளது. அனைவரது ஆதரவோடு தலைவராகி இருக்கிறேன்.

எனது தந்தை எனது உழைப்பை பாராட்டியுள்ளார். நானும் அப்படியே வாழ்வேன். என்னை விட எனக்கு கட்சி பெரிது. சின்னம் தான் பெரிது. கறுப்பு சிவப்பு வண்ணமே பெரிது. தற்போதைய அரசியலில் மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை அடகு வைக்கப்பட்டுள்ளது. கூறு போட்டு கொள்ளை அடிக்கும் அரசு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து மீட்பது நமது முதல் கடமையாக இருக்கும். கொள்கையே இல்லாத சில கட்சிகள் உள்ளது. தமிழக ஆட்சியை பார்க்கையில் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எண்ண தோன்றுகிறது.

இன்று நீங்கள் பார்க்கும் முக ஸ்டாலின் என்ற நான் , புதிதாக பிறக்கிறேன். வேறு ஒரு நான். எனது கனவை மெய்ப்பிக்க கட்சி தொண்டர்கள் இல்லாமல் நான் எதையும் சாதிக்க முடியாது. தமிழகத்தின் கனவை நிறைவேற்ற வாருங்கள். முன்னேற்றம் காண, மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா, மாநில அரசை தூக்கி எறிய வா. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம். கட்சியே எனது குடும்பம். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக பொருளாளராக பொறுப்பேற்ற துரைமுருகன் பேசுகையில், இத்தனை காலம் நான் தம்பி என்று தான் அழைத்து வந்துள்ளேன். இன்று முதல் நான் தலைவர் ஸ்டாலின் என அழைக்கிறேன். 1962ல் அரைக்கால் சட்டை பனியன் போட்டு கொண்டு, எங்களை கண்டு பயந்து ஓடுவீர்கள். என் கண் முன்னால் வளர்ந்து என் தலைக்கு மேல் நின்று தலைவனாகி விட்டீர்கள். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Leave a Response