எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருப்பவர்களாக இருந்தால் 18 பேரும் கட்சிக்கு திரும்ப வர வேண்டும்-அமைச்சர் ஜெயகுமார்..!

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருப்பவர்களாக இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் கட்சிக்கு திரும்ப வர வேண்டும் என்றும், அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை கூறியதால், வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்ல உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அதிமுக என்பது மாபெரும் கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களால் இந்த கட்சி சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.

எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் தலைவராக ஏற்றுக்கொண்ட யாரும் அடுத்த கட்சிக்கு செல்ல மாட்டார்கள். தற்போதைய அரசு அம்மா ஏற்படுத்தியது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை அவர்களை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

அவர்கள் கட்சிக்கு மீண்டும் வர விரும்பினால் நாங்கள் அவர்களை அழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால், சசிகலா, தினகரன், திவாகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒருபோதும் கட்சியில் சேர்க்கமாட்டோம்.

கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் கட்சிக்கு பிரச்னைகள் வருவதை விரும்பமாட்டார்கள். கட்சிக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றார்.

மேலும், உண்மையாகவே கட்சியின் நலனை விரும்புபவர்களாகவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உண்மையான அன்பு இருப்பவர்களாக இருந்தால் அவர்கள் கட்சிக்கு திரும்ப வர வேண்டும் என ஜெயகுமார் கூறினார்.

Leave a Response