அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்ப திருமண விழாவில் எஸ்.வி.சேகர்..!

அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் குடும்ப திருமண விழாவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டும் அவருக்கு முன் ஜாமீன் வழங்காத நிலையிலும், அவர் 50 நாளுக்கு மேல் தலைமறைவாகவே இருக்கிறார்.

அவர் வருகிற 20ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை உருவாக்கி கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகனின் நிச்சயதார்த்த விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அந்த விழாவில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதோடு, தம்பதிகளுடன் அவர் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன் எஸ்.வி.சேகர் பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார். ஆனால், அவருடன் நின்று செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response