நீட் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன : திருநாவுக்கரசர் கேள்வி..!

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டதை விட ஒருநாள் முன்கூட்டியே வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வின் முடிவுகள் திட்டமிட்டதை விட ஒருநாள் முன்னதாக கடந்த 4ம் தேதி வெளியானது. இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுக்க மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பதிலளித்த அவர், நீட் தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்கூட்டியே வெளியிட வேண்டியதன் அவசியம் என்ன? மாணவி பிரதீபா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நியாயமான விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு பணியில் இருக்கும் நீதிபதியை விசாரணை அதிகாரியாக அரசு நியமிக்க வேண்டும்.

எப்போதும் தமிழர் போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசுவதே சுப்பிரமணிய சுவாமியின் வாடிக்கை. அவர் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response