தூத்துக்குடி போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்- சரத்குமார் கோரிக்கை..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் கூறினார்.

இதுதொடர்பாக அவர், தூத்துக்குடியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சமூக விரோதிகள் என நடிகர் ரஜினிகாந்த் பேசிய விதம் வருத்தம் அளிக்கிறது.  போராட்டத்தில் பங்கேற்ற சமூக விரோதிகள் யார் என அவர் விளக்க வேண்டும். மக்களின் போராட்டத்தை தவறாக சித்திரிக்க வேண்டாம்.
போராட்டம் தொடர்பாக பொதுமக்கள் மீது இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து சரத்குமார் ஆறுதல் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியையும் அவர் வழங்கினார்.

 

Leave a Response