ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மோர்பண்ணை ரணபத்திரகாளி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே மோர்பண்ணை கிராமத்தில் ரணபத்திர காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலின் வைகாசித் திருவிழா மே 24 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வியாழக்கிழமை அன்று பக்தர்கள் கடலில் புனித நீராடி பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
பின்னர் மாலை உள்ளூர் வீரர்கள் கலந்து கொள்ளும் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு படகிலும் 5 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியை கிராம தலைவர் வெள்ளிமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 மைல் தூரம் போட்டிக்கான எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30,001, இரண்டாவது பரிசு ரூ.25,001, மூன்றாவது பரிசு ரூ.20,001, நான்காவது பரிசு ரூ.15,001 வழங்கப்பட்டது.
இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு ரசித்தனர்.