தமிழகத்தில் 10 அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக் கருவி நிறுவப்படும்-சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..!

தமிழகத்தில் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக் கருவி நிறுவப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை குடும்ப நல பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:

ஒவ்வொரு சிகரெட்டிலும் நான்காயிரத்துக்கும் அதிகமான நச்சுப்பொருள்கள் காணப்படுகின்றன. அதில் 50 நச்சுப் பொருள்கள் புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையவை. தொடர்ச்சியான புகைபிடித்தலினால் பக்கவாதம், மாரடைப்பு, பார்வை பாதிப்பு மற்றும் நுரையீரல், வாய் குடல் மூச்சுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும். தொடர்ச்சியாக புகைப் பழக்கம் உள்ளவர்களின் ஆயுள்காலம் பாதியாகக் குறையும். ஒவ்வொரு முறை புகை பிடிக்கும் போதும் மனிதன் வாழ்நாளில் 14 நிமிஷங்களை இழக்கிறான்.

புகை பிடிப்பவருக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் புகைபிடிப்பவரின் அருகில் இருப்போருக்கும் ஏற்படும். தமிழகத்தில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 40.1 சதவீதத்திலிருந்து 31.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அனைத்து வட்டாரஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை மையம் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரூ.170 கோடி மதிப்பில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக் கருவி 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளது என்றார். சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Response