ரஜினியுடன் மோதும் அமீர்- “காலா” ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட திட்டம்..!

தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காலா’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பெரும்பாலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால் ‘காலா’ ரிலீஸ் ஆகும் நாளில் வேறு படங்கள் எதுவும் வெளியாகாது எனக் கருதப்படுகிறது. ஆனால், அமீர் தயாரித்துள்ள ‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படம் அதே தேதியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த முத்துகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. தமிழகத்தில் நடக்கும் பல பிரச்னைகளை மையைப்படுத்தியும் அதில் ஒரு பிரச்னையை பிரதானப்படுத்தியும் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இயக்குநர் அமீரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினியின் கருத்துகளுக்கு எதிரான நிலையில் இருக்கும் அமீர் ரஜினியின் காலா படத்திற்கு எதிராக தனது படத்தைக் களமிறக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படம் மக்கள் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். ‘காலா’ பட ரிலீஸ் அன்றே இப்படம் வெளியாகுமா என்பது விரைவில் தெரியவரும்.

Leave a Response