தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், டாக்டர் ஐசரி கே கணேஷ் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.
அவரை சந்தித்த பிறகு நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐசரி கே கணேஷ் கூட்டாக போட்டியளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, “விஜயகாந்த் அவர்களை சந்தித்து நாங்கள் ஆதரவு கேட்டிருக்கிறோம். அவரும் எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலத்தில் நிறைய செய்திருக்கிறார், கடன்களை அடைத்திருக்கிறார். விஜயகாந்த் சார் எங்கள் கையப்பிடித்து நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என சொல்லி எங்களை வாழ்த்தியிருக்கிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், விஜய் சார் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம்.
நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு ஓய்வு ஊதிய உதவித்தொகை வழங்கப்படும். நாடக நடிகர்கள் எல்லாம் சிரமத்தில் இருக்கிறார்கள், அவர்களை கைதூக்கி விடுவது தான் எங்கள் நோக்கம். நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. இதில் அரசியல் தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி ஒரு விஷயமே இங்கு இல்லை.
பாண்டவர் அணி உண்மையில் எதையும் சரியாக செய்யாததால் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். கட்டிட வேலைகள் எல்லாம் ஒன்றரை வருடமாக அப்படியே பாதியில் நிற்கிறது. எங்கள் நோக்கமே அந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பது தான். அதில் தான் எங்கள் முழு கவனமும் இருக்கிறது. வெற்றி ஒன்று தான் எங்கள் இலக்கு. எங்கள் அணியில் ரமேஷ் கண்ணாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து மேல் முறையீடு செய்திருக்கிறோம்” என்றனர்.