நீட் தேர்வு:காவிரி விவகாரம்: மத்திய அரசு மீது விஜயகாந்த் கடும் விமர்சனம்..!

நீட் தேர்வு மற்றும் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டு நடத்துகிறது என்று மத்திய அரசுக்கு தேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான மையங்கள் கேரளா மற்றும் ராஜஸ்தானில் போடப்பட்டு இருப்பதற்கும், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுதொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ தெரிவித்து இருக்கும் கருத்தும் ஏற்புடையது அல்ல; இருப்பினும் தேர்வுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தமிழக மாணவர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாதவாறு தேர்வு எழுதச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு, காவிரி விவகாரம் என அனைத்து விவகாரத்திலும் தமிழக்த்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்தி வருவது ஏற்புடையது அல்ல; அதே நேரம் தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு 1000 ரூபாயை முன் பணமாகக் கொடுத்து இருக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கும் தேமுதிக கண்டனம் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response