கறுப்புக் கொடி காட்டுவது திமுகவின் உரிமை:எனக்கு கவலையில்லை-நிர்மலா சீதாராமன்..!

கறுப்புக்கொடி காட்டுவது திமுகவின் உரிமை, கறுப்புக்கொடி காட்டியது பற்றி தனக்கு கவலையில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நேற்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அப்போது நிர்மலா சீதாராமனின் கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்மலா சீதாராமனுக்கு கறுப்புக்கொடி காட்டியதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மதுரை மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை சீரமைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசு திட்டங்களை மே.5 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கறுப்புக்கொடி காட்டுவது திமுகவின் உரிமை என்ற அவர், திமுகவினர் கறுப்புக்கொடி காட்டியது பற்றி தனக்கு கவலையில்லை என்றார்.

Leave a Response