பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தலித் மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது-மாயாவதி குற்றச்சாட்டு..!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எனவே மாயாவதி கடந்த இரு தினங்களாக மைசூரு, பாகல் கோட்டை, சித்ரதுர்கா உள்ளிட்ட இடங்களில் மஜத கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று சித்ரதுர்காவில் நடந்த மாநாட்டில் மஜத தேசிய தலைவர் தேவேகவுடா, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, மஜத மாநில தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாயாவதி பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தலித் மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான ஆட்சியில் இந்துத்துவ அமைப்புகள் புத்துயிர் பெற்றுள்ளன. உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்துத்துவ‌ அமைப்பினர் 10-க்கும் மேற்பட்ட தலித் மக்களைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இதைப்பற்றி பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார். தற்போது மத்திய பாஜக அரசு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்துள்ளது. பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

மோடியின் பணமதிப்பு நீக்க‌ நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏழை எளிய மக்களும், விவசாயிகளும், சிறு தொழில் செய்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் மோடி அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும். எனவே தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ், பாஜக தவிர்த்து மஜத கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Leave a Response