பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குளறுபாடுகள் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக மக்கள் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரவுள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய வகையில் காவிரி நீர் பங்கீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கவும் தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமை நிலைநாட்டப்படவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது விவசாய பெருமக்கள், அரசியல் கட்சியினரின் வேண்டுகோளாக இருக்கிறது. 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட நடுவர் மன்ற தீர்ப்பு முதல் உச்சநீதிமன்றம் கடைசியாக பிப்ரவரி 16ல் சொன்ன இறுதித் தீர்ப்பு வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் அரசியல் காரணங்களுக்காக காவிரி வாரியம் தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதம் மார்ச் 30ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழலில் தான் சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

பிரதமரின் வருகையின் போது கருப்புக்கொடி மற்றும் கருப்புச் சட்டை அணிந்தும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. பிரதமரின் விமானம் மேலே பறந்தாலும் கீழே கருப்புக் கடலாக காட்சியளிக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. நாளை காலை 6.20க்கு டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் 9.25க்கு சென்னை வந்தடைகிறார். 9.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மாமல்லபுரம் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்று ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

11.50 மணி வரை ராணுவ கண்காட்சியை பார்வையிட்ட பிறகு 11.55 மணிக்கு மீண்டும் மாமல்லபுரம் ஹெலிபேட் இருக்கும் இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்திற்கு வருகிறார். புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடத்தை தொடங்கி வைத்த பின்னர் பிற்பகல் 1.55 மணிக்கு ஐஐடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு  இருப்பதால் பெரும்பாலான சாலை போக்குவரத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் ஹெலிபேட் அமைப்பதற்காக ஒரு பகுதி சுற்றுச்சுவரானது முற்றிலும் இடிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் பிரதமரின் சென்னை வருகையின் போது அவர் சாலை மார்க்கமாக செல்வது என்பது மாமல்லபுரம் முதல் திருவிடந்தை வரையிலான குறுகிய அளவு மட்டுமே மற்ற அனைத்து பயணமுமே வான்வழி பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஐபிஎல்லுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போதே கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இந்நிலையில் பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Response