காவிரி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்-முத்தரசன்…

காவிரி தொடர்பான போராட்டங்களில் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று அனைவரையும் நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நீர் பகிர்வு தொடர்பாக கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பல வடிவங்களில் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். விளையாட்டை அரசியலாக்க வேண்டும் என எவருக்கும் விருப்பம் இல்லை. ஆனால், குடிநீர் மற்றும் உணவுக்கும் உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் விளையாடியாக வேண்டும் என அடம்பிடித்து செயல்படுவது ஆத்திரமூட்டும் செயலாகும்.

சென்னையில் நேற்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது காவல் துறை காட்டுமிராண்டித்தன தாக்குதலை நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. அத்துடன், காவிரி நீர் உரிமை தொடர்பான போராட்டங்களில் பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று அனைவரையும் நிபந்தனையின்றி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Response