ஐபிஎல் போட்டி நடக்குமா? – அமைச்சர் ஜெயக்குமார் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை..

சென்னையில்  ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் பேசியுள்ளதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “பிரதமர் மோடி தமிழகம் வரும்போது பச்சைக்கொடி கட்டுவோம் என விவசாயத்தைக் குறிக்கும் வகையில்தான் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பார். அவருடைய சொந்த கருத்தாக இருந்தாலும் விவசாயத்தை மனதில் வைத்துதான் அவ்வாறு கூறியிருப்பார்.

காவிரி வழக்கில் உரிய வாதங்களை தமிழகம் முன்யவைக்கவில்லை என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்.

காவிரி பிரச்சனையில் தமிழகமே கொந்தளிப்பில் இருக்கும்போது ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்மந்தப்பட்ட நிர்வாகிகளிடம் பேசியுள்ளோம். இருப்பினும், போட்டியை நடத்துவதும் நடத்தாததும் ஐபிஎல் நிர்வாகத்தின் விருப்பம்.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் ஒதுக்க நிதி ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகம் குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை முறையாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்ததால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதனால், 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு வரி வருவாய் ஒதுக்க வேண்டும் என திட்ட கமிஷன் தலைவர், நிதித்துறை செயலாளர் ஆகியோரிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் சுயாட்சியையும், நிதி தன்னாட்சியையும் பேணிக்காப்போம்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Response