அம்மா இலவச ‘வை-பை’ சேவையை துவங்கி வைத்த முதல்வர் எடப்பாடி!

அம்மா இலவச ‘வை-பை’ சேவையை தமிழகத்தின் ஐந்து முக்கிய நகரங்களில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார்.

தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா கடந்த 2016ல் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், மற்றும் வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இலவசமாக ‘வை-பை’ சேவை முதல்கட்டமாக 50 இடங்களில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

ஆனால், அவர் காலமான காரணத்தால், ஆளும் அதிமுக., கட்சி தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் இந்த சேவையை வழங்க கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரூ. 8.5 கோடி ஒதுக்கியது. இதன்படி, இத்திட்டத்துக்கான வேலைகள் துவங்கி இன்று முதல்கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இந்த சேவையை துவங்கிவைத்தார்.

எங்கு…எங்கு:இது தற்போது சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே, கோவையின் காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம் மத்திய பேருந்து நிலையம், மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி) மற்றும் கோவை மத்திய பேருந்து நிலையம் என ஐந்து இடங்களில் இந்த இலவச அம்மா ‘வை-பை’ சேவையை முதல்வர் எடப்பாடி துவங்கி வைத்தார்.

என்ன திட்டம்: பயனாளர்கள் தங்களது பெயர், மொபைல் நம்பர், இ-மெயில் ஐடி., வழங்க வேண்டும். அதன் பின் அவர்களுக்கு 4 இலக்க பாஸ்வேர்டு கிடைக்கும். அதை பயன்படுத்து இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எவ்வளவு நேரம்: 
ஆனால் முதல் 20 நிமிடங்கள் தான் பயனாளர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியும். அதன் பின் பிரைம் சேவையில் இணைந்து, ஒரு மணிநேரத்துக்கு ரூ. 10, இரண்டு மணி நேரத்துக்கு ரூ. 20 கட்டணமாக செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இணையதள வேகம் 4 எம்.பி.பி.எஸ்.,ஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால், இந்த வேகம் பயனாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response