காவிரி வாரியம் அமைக்க வேண்டும்… கடவுச்சீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட தேமுதிக!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் 8 இடங்களில் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை முன்பு தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சாலிகிராமத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நுழைவு வாசலில் நின்றபடியே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாக தேமுதிகவினர் தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை தமிழக அரசு தர வேண்டும் என்றும் மத்திய அரசு சொல்வதைக் கேட்டு செயல்படும் முதல்வர், துணை முதல்வர் எப்போது மாறப்போகிறார்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.

Leave a Response