சென்னையில் 17 வயது சிறுமிக்குப் பெண்குழந்தை! – தாயும் அவரது ஆண் நண்பரும் கைது

சென்னையில், 17 வயது சிறுமிக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது. அதை மறைத்த குற்றத்திற்காக, அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த நிலைமைக்குக் காரணமானவர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர், கஸ்தூரி (பெயர் மாற்றம்). இவரது மகள் கனகா (பெயர் மாற்றம்). கஸ்தூரிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். கஸ்தூரியும் கனகாவும் தனியாக வசித்துவந்தனர். இந்த நிலையில், கஸ்தூரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர், கூலித் தொழிலாளி. தொடர்ந்து ஓரே வீட்டில் அனைவரும் வசித்துவந்துள்ளனர்.

சில மாதங்களாக கனகாவின் உடலில் மாற்றம் தெரிந்துள்ளது. இதுகுறித்து அவரது தாயார் கேட்டபோதெல்லாம் கனகா சமாளித்துள்ளார். ஒருகட்டத்தில், கனகாவால் சமாளிக்கமுடியவில்லை. கனகா, நிறைமாத கர்ப்பிணி என்றும், அதற்குக் காரணம் ரமேஷ்தான் என்று தெரிந்ததும், கஸ்தூரி கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால், வீட்டில் தகராறு ஏற்பட்டது. இந்தச் சமயத்தில், கடந்த 19-ம் தேதி, கனகாவுக்குப் பெண்குழந்தை பிறந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு, குழந்தை விவகாரம் தெரிந்தால் சிக்கல் என்று கருதிய கஸ்தூரி, உறவினரிடம் அந்தக் குழந்தையைக் கொடுத்துவிட்டார்.

இருப்பினும், குழந்தைகுறித்த தகவல் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தெரியவந்தது. அவர்கள், இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார், மூன்று பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷையும், குற்றத்தை மறைத்ததற்காக கஸ்தூரியையும் போலீஸார் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response