கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் 2020 மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு சுமார் 6 மாதங்கள் தொடர்ந்தது. பின்னர் ஒவ்வொரு தொழிலாக கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திரைத்துறைக்கு மட்டும் தளர்வுகள் சற்று நிதானமாகவே சிறிதளவு கொடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், சினிமா துறையை சார்ந்த ஊழியர்கள் முழுவதுமாக வருமானமின்றி பாதிக்கப்பட்டனர். இதில் குறிப்பாக தொழில்நுட்ப பணியில் உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக ‘தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனம்'(FEFSI) சார்பாக அதன் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிழக அரசு, திரைத்துறையில் செழிப்போடு இருக்கக்கூடிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் நிதியுதவி கேட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் பத்திரிகை அறிக்கை மூலமாக பல முறை கோரிக்கைகள் வைத்து வந்தார்.
பெப்சியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறை ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக ‘தென்னிந்திய திரைப்பட ஊழியர்கள் சம்மேளனத்துக்கு'(FEFSI) நிதியுதவி வழங்கினார்கள்.
பெப்சிக்கு நிதியுதவி செய்த தமிழக அரசுக்கு, உதவி பெற்றப்போதே நன்றி தெரிவித்தனர் பெப்சி நிர்வாகம். திரைத்துறை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பெப்சிக்கு செய்த நிதி உதவிக்காக, பிப்ரவரி 2ம் தேதி பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பொருளாளர் சாமிநாதன் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையின்படி, பெப்சிக்கு வந்த நிதி உதவி ரூ.3,93,84,310 எனவும் அதை வழங்கியக்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
விஷயம் என்னன்னா, இயக்குநர் விஜய் இயக்கி வரும் ‘தலைவி’ படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரநாவத் ரூபாய் ஐந்து லட்சம் கொரோனா நிதி உதவியாக பெப்சி நிர்வாகத்துக்கு ஏப்ரல் 21, 2020 அன்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த நிதி உதவி பற்றி பெப்சி நிர்வாகம் பிப்ரவரி 2ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கங்கனா ரநாவத் பெயர் தவறுதலாக விடுப்பட்டுவிட்டதா அல்லது அந்த வசூல் கணக்கில் வரவைக்கப்படவில்லையா என ஒரு சந்தேகம் எழுகிறது.
இது மட்டுமின்றி ‘தலைவி’ திரைப்படத்தின் இயக்குநர் விஜய், அப்படத்தில் பணியாற்றிய 125 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா நிதி உதவியாக தலா ரூ.4000 என மொத்தம் ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெப்சிக்கு கொரோனா நிதி உதவி அளித்தவர்கள் கணக்கு பட்டியலில் கங்கனா ரநாவத் பெயர் மட்டும் தான் விடுபட்டதா அல்லது வேறு பலர் பெயர்களும் விடுபட்டிருக்குமோ என பெப்சி தொழிலாளர்கள் புலம்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்திக்கு பிறகு பெப்சி என்ன அறிக்கை விடுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.