தன் பிறந்தநாளுக்காக, அத்தையின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திய ஜெயலலிதாவின் வாரிசு…

தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா, சில நாட்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம்ம் தேதி இறந்துவிட்டார். அவருக்கு பிறகு சில நாட்கள் ஓ.பன்னீர்செல்வம் தற்கால முதல்வராக இருந்து வந்தார். கட்சியில் பல பிரச்சனைகள் அரங்கேறி, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடைமையாக்க இன்றுவரை முயற்சித்து வருகிறது. எடப்பாடி அரசின் இந்த முயற்சியை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் இருவரும் நீதிமன்றம் சென்று அவர்கள் இருவர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவிக்க வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரையும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவித்துவிட்டனர்.

தீபக், இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய அத்தை ஜெயலலிதாவின் சமாதிக்கு இன்று காலை சுமார் 07:00 மணியளவில் தன்னுடைய நண்பர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

தன்னுடைய 40வது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து வாழும் தங்கத் தாரகை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளராகத் திகழ்ந்தவருரான செல்வி.ஜெயலலிதா அவர்களின் சகோதரர் திரு.ஜெயக்குமார் அவர்களின் மகனாகப் பிறந்தது நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். அதன்மூலம், செல்வி.ஜெயலலிதா அவர்களின் அதிகாரப்பூர்வ குடும்ப வாரிசாக தமிழக மக்களாலும், சட்டத்தின்பாலும் நான் அடையாளம் காணப்பட்டு, அங்கீகாரம் பெற்றுள்ளதில் பெருமகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன்.

இன்று எனது 40-வது வயதை நிறைவு செய்து 41-வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். அதை முன்னிட்டு, செல்வி.ஜெயலலிதா அவர்களின் மங்காப் புகழை வரலாற்றில் நீங்கி நீடித்திருக்கச் செய்யும், அவரது நினைவிடம் சென்று, இதயப்பூர்வமாக அவரது ஆசியை வேண்டிப் பெற்றேன்.

எனது அத்தையாரான செல்வி.ஜெயலலிதா அவர்கள் இந்தப் பூவுலகில் வாழ்ந்த போது, எனக்கும் என் குடும்பத்தினருக்கும், கௌரவமும், அங்கீகாரமும், போதுமான அளவுக்கு ஆஸ்தியையும் அளித்து எங்களை நலமோடு வாழ வைத்திருந்தார். தற்போது, எனது அத்தையாராகிய செல்வி.ஜெயலலிதா, இந்தப் பூவுலகை விட்டு மறைந்துவிட்டாலும், எங்களின் நலன் காக்கும் வகையில், எங்கள் குடும்பத்தின் கௌரவத்தைக் காக்கும் வகையில், அங்கீகாரம், ஆஸ்தி மற்றும் விலைமதிப்பில்லா அவரது ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து வழங்கி என்னையும், என் குடும்பத்தினரையும் இன்றும் நலமோடு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து என்றென்றும் நிலைத்து வாழும் என் அத்தையாராகிய செல்வி.ஜெயலலிதா அவர்களின் விருப்பத்தின்படி, என் வாழ்வையும், எனக்கு அவர் கொடுத்துச் சென்ற ஆஸ்தி, அந்தஸ்து ஆகியவற்றையும், தமிழக மக்களின் நலனுக்குப் பயன்படும்படி பயனுள்ள வாழ்க்கையை வாழ்வேன். அதன்மூலம், என் அத்தையாராகிய செல்வி.ஜெயலலிதா அவர்களின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் திகழ்வேன் என எனது 41-வது பிறந்த நாளான இன்று உளமார உறுதியேற்கிறேன்.” இவ்வாறு தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தீபக் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Leave a Response