ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பயத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம்!

mett

சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து இரட்டை இலையை மீட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் கண்டனர். ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், தனக்கு கிடைத்த குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்று இரட்டை இலையையும் கட்சியையும் மீட்பேன் என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தினகரன் ஓரங்கட்டப்பட்டது முதல், பழனிசாமி அணியில் தனது ஆதரவாளர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருப்பவர்களாகவும் தேவையான நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் தொடர்ச்சியாக கூறிவந்தார். அவரது ஆதரவாளர்களாக வெற்றிவேல், புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் ஸ்லீப்பர் செல்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

dinakaran4567

அதை உறுதிப்படுத்துவது போல, வாக்கு எண்ணிக்கையின்போது தினகரன் முன்னிலையில் இருந்தபோது அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. தினகரன் வெற்றி அறிவிக்கப்படும் முன்னரே, தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு சென்ற செங்குட்டுவன் எம்பி, தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இச்சம்பவம் ஆட்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றியை அடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அனைவரும் தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள் என தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதைக்கேட்டு பழனிசாமி-பன்னீர்செல்வம் தரப்பு சற்று அதிர்ந்து போயுள்ளது என்றே கூறப்படுகிறது.

epsops

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான இந்த ஓராண்டில், அணி தாவல் என்பது வாடிக்கையாக உள்ளது. இதற்கிடையே தினகரன் பணப்பட்டுவாடா செய்வதற்கு சில அமைச்சர்களே உதவியதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டும் ஆட்சியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே ஆர்.கே.நகரில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும் அணி தாவலை தடுப்பது குறித்தும் இன்று நடக்கும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Leave a Response