ஆர்.கே.நகர் வாக்காளர்கள் சொன்னபடி தினகரனுக்கு ஓட்டுப் போட்டு முடித்து விட்டனர். இனி தினகரன் சொன்னபடி செய்வாரா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர். என்ன செய்யப் போகிறார் தினகரன் என்பது தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
மிகப் பெரிய உறுதி மொழிகள் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தினகரனுக்கு மிகப் பெரிய சவால் காத்துள்ளது.
சொன்ன உறுதிமொழிகளை அவர் எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. காரணம் நடைமுறைச் சிக்கல்கள் அப்படி.

தினகரன் தரப்பில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும், தெம்பான பேச்சும்தான் பெண்களின் ஆதரவு அமோகமாக கிடைக்க முக்கியக் காரணம்.
அதேசமயம், ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்துடன் உள்ளனராம் ஆர்.கே.நகர் மக்கள். ஜெயலலிதா இருந்தபோதும் சரி, அவர் இறந்த பிறகும் சரி சொன்ன எதையுமே ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்பது தொகுதி மக்களின் ஏகோபித்த குரலாக உள்ளது.

அதேபோல ஆட்சியாளர்களை தட்டிக் கேட்பதில் எதிர்க்கட்சிகள் சரிவர செயல்படவில்லை, ஆணித்தரமாக எதையுமே செய்யவில்லை என்பதும் தொகுதி மக்களின் குமுறலாக உள்ளது. இதனால்தான் குக்கரைப் பார்த்து நகர்துள்ளது தொகுதி. இதற்கு முக்கியக் காரணம், தினகரன் சொன்னால் செய்வார் என்ற நம்பிக்கை.
செய்வாரா:-
ஆனால் தினகரன் சொன்னதையெல்லாம் செய்வாரா. தொகுதி மக்களை திருப்திப்படுத்துவரா.. அதற்கு ஆட்சி அதிகாரம் அவருக்கு உறுதுணையாக இருக்குமா என்பதுதான் இப்போது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.