கலகல காமெடியாய் ஒரு காதல் கதை! ‘சக்கபோடு போடு ராஜா’ விமர்சனம்…

IMG-20171223-WA0023
ஊரில் பெரிய தாதா சம்பத்ராஜ். அவரது தங்கையைக் காதலிக்கிறார் சந்தானத்தின் நண்பர்.

சம்பத்ராஜுக்குத் தெரியாமல் அவர் தங்கைக்கும் தன் நண்பனுக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார் சந்தானம்!

தாதா சம்பத்ராஜ் இப்போது என்ன செய்வார்? சந்தானத்தை பொளந்துகட்ட தேடுவார்தானே?

தேடுகிறார். அடுத்து என்ன?

திரைக்கதையில் சந்தானத்துக்கும் சம்பத்ராஜின் இன்னொரு தங்கை வைபவிக்கும் காதல் வருகிறது!

கதை இப்படி போனால் அடுத்தடுத்த காட்சிகளில் ரத்தமும் சதையும்தானே சக்கபோடு போடும்?

அதுதான் இல்லை! அடுத்தடுத்த காட்சிகள் காமெடியாக நகர்கிறது.

அந்த காமெடி களேபரங்களை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

தெலுங்கில் வந்த லெளக்கியம் என்ற படத்தின் ரீமேக் இயக்கம் ஜி.எஸ். சேதுராமன்.

சந்தானம் டிரென்டியான ஹேர் ஸ்டைல், தாடி, கலர்ஃபுல் காஸ்ட்யூம் என செம யூத்தாக வருகிறார். ரொமான்ஸ், ஆக்ஷன் ஏரியாக்களில் இறங்கியடிக்க முயற்சிக்கிறார். தனக்கே உரிய சலம்பல் டயலாக் காமெடியையும் விட்டுக் கொடுக்கவில்லை!

அடுத்தடுத்த படங்களுக்கான கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க புரோ!

சற்றே திமிர்பிடித்த பெண் கேரக்டர் வைபவிக்கு. தோற்றம் குழந்தையாய் இருப்பதால் கேரக்டர் அவ்வளவாக ஒட்டாவிட்டாலும் கொஞ்சலும் மிஞ்சலுமான ரொமான்ஸை வைத்து சமாளித்திருக்கிறார்!

சந்தானம் இருந்தாலே காமெடி தூள் கிளப்பும். இதில் விவேக்கும் இருக்கிறார். ரகளையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பை முடிந்தமட்டும் நிறைவேற்றியிருக்கிறார் சின்னக் கலைவாணர் விவேக்!

சம்பத்ராஜ் ஆரம்பத்தில் தாதாவாக வந்து கொஞ்சம் கொஞ்சமாக வீரியம் குறைந்து காமெடி வட்டாரத்தில் தஞ்சமடைவது ரசிக்கும்படி இருக்கிறது!

பவர் ஸ்டார், ரோபோ சங்கர் செய்வதெல்லாம் காமெடி என ஏற்க முடியவில்லை!

விடிவி கணேஷ் இதுவரை வந்த படங்களில் எப்படியோ இதிலும் அப்படியே. கூடுதல் செய்தி படத்தின் தயாரிப்பாளரும் இவரே!

இந்த படம் மூலம் எஸ்.டி.ஆர். சிம்பு இசையமைப்பாளராகியிருக்கிறார். சந்தானத்துக்கான அறிமுகப் பாடலில் ஈர்க்கும ‘சங்கதி’ இருக்கிறது. மற்ற பாடல்கள் இரைச்சலாய் கடந்து போகின்றன. பின்னணி இசை ஓகே ரகம்! இசையமைப்பாளராக அடுத்தடுத்த படங்களில் சிம்பு இன்னும் அதிகமாய் கவனிக்க வைப்பார் என நம்புவோம்!

சின்னச் சின்ன சுவாரஸ்யங்களில் திருப்தியடையாமல் திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் தெறிக்க விட்டிருக்கலாம்.

Leave a Response