காவிரிப் பிரச்னைக்காக திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்..

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் போராட்டக்களத்தில் குதித்துவருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை, இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடலூர் – திருச்சி பயணிகள் ரயிலை மறித்து, புதிய தமிழகம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டும், ரயில்மீது ஏறியும் மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல, புதிய தமிழகம் கட்சி சார்பில் சாலைமறியலும் நடைபெற்றது. மேலும், தி.மு.க சார்பில் திருவெறும்பூரிலும் மற்றும் காங்கிரஸ் சார்பிலும் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருச்சியில் தொடரும் போராட்டங்களால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, தமிழ்நாடு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் நியூட்ரினோ மற்றும் ஸ்டெரிலைட் போன்ற திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமார் தலைமையிலான வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இதேபோல, நாளை ஆளுங்கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடக்கும் உண்ணாவிரதம், விவசாய சங்கங்கள் சார்பில் நடக்கும் விமான நிலைய முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களால், திருச்சி பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.

Leave a Response