தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார்.
ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள்ளது.
சவுக்கு சங்கர் இணையதளம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மொத்தம் 36 ஆயிரத்து 761 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் ஓபிஎஸ்-க்கு 38.5 சதவீதமும், இபிஎஸ்-க்கு 22.6 சதவீதமும். சுமந்த் சி.ராமனுக்கு 29.8 சதவீதமும், டிடிவி தினகரனுக்கு 9.1 சதவீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதே போல் இந்தியன் 7 என்ற இணைதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஓபிஎஸ்-க்கு 59 சதவீதமும், இபிஎஸ்-க்கு 41 சதவீத வாக்குகளையும் ஆதரவாக பதிவு செய்திருந்தனர்.
இதுதவிர பொதுமக்களும் தங்களது பங்கிற்கு தனித்தனியாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக யார் வரவேண்டும்? என்ற கேள்வியை பதிவிட்டு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். அனைத்து கருத்துக் கணிப்புகளிலுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவு நிலை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வெளிவந்து கொண்டிருப்பதால் இபிஎஸ் தரப்பினர் மௌனம் காத்து வருகின்றனர். ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல்களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.



