அரக்கோணம் தொகுதி மீது தனி கவனம் செலுத்தும் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடை பெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற திமுகவும் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் விடியலைத் தேடி, அதிமுகவை நிராகரிப்போம், மக்கள் கிராமசபை என பல தலைப்புகளில் மக்களை சந்தித்து வருகிறார். இப்போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய தலைப்பில் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில் பனப்பாக்கம் பகுதியில் நடை பெற்ற கூட்டத்தில் “அரக்கோணம் எம்.எல்.ஏ. அமைச்சர்களுக்கு இணையாக ஊழல் செய்து இருப்பதாகவும், மணல் கடத்தல் உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்தவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்றும், அரக்கோணம் எம்.எல்.ஏ. சு.ரவிக்கு சிறை உறுதி என எச்சரிக்கும் விதத்தில் பேசியது மாவட்டம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ. சு.ரவி ஒரு கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி தேவை இல்லாமல் பேசி இருந்தார். இதையடுத்து தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் சு.ரவியை தோற்கடித்து அரக்கோணம் தொகுதியை மீண்டும் திமுக கோட்டையாக மாற்றிக் காட்டுகிறேன் என ஸ்டாலினிடம் மாவட்ட செயலாளர் காந்தி வாக்கு கொடுத்திருக்கிறாராம். இதற்கிடையில் அரக்கோணம் தொகுதி ரிசர்வு தொகுதி. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை எதிர்க்கும் அளவுக்கு பலம் வாய்ந்த வேட்பாளரை களம் இறக்க திமுக தனி கவனம் செலுத்தி வருகிறதாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரிசர்வ் தொகுதிகளிலும் நிறுத்தப்படும் வேட்பாளர்களை இறுதி செய்யும் இடத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா இருப்பதாக சொல்கிறார்கள்.

சென்னையை அடுத்து உள்ள அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் ரேசில் இருந்தது ராஜ்குமார், பவானி வடிவேலு, வக்கீல் எழில் இனியன் ஆகிய 3 பேர்தான்.

இதில் கடந்த முறை சீட் கிடைத்து மாற்றப்பட்ட பவானி வடிவேலு பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கணவர் வடிவேலு வன்னியர் என்பதாலும், அரக்கோணம் பகுதியில் ஏற்கனவே இந்த இரு சமூகத்தினரிடையே கடும் மோதல்கள் அவ்வப்போது தொடர்வதால் கடந்த முறை கடும் எதிர்ப்பு என்ன எதிர்ப்பு இருந்ததோ அதே எதிர்ப்பு இப்போதும் உள்ளது.

கடந்த முறை தோல்வி அடைந்த ராஜ்குமார் மீது ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ. ரவியுடன் ரகசிய டீல் பேசியதால் தான் தோற்றுப் போனார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதோடு புத்தாண்டை முன்னிட்டு அதிமுக எம்.எல்.ஏ. சு.ரவியை ஒரு அதிகாலை நேரம் சந்தித்து ராஜ்குமார் ஏலக்காய் மாலை போட்டதாக ஒரு தகவலும் அரக்கோணம் முழுக்க உலா வருகிறது. இதுபோன்ற காரணங்களால் ராஜ்குமாருக்கும் வேட்பாளர் ரேசில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராக இருக்கும் வக்கீல் எழில் இனியன் ஏற்கனவே 3 முறை சீட் கேட்டு இருக்கிறாராம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை எதிர்க்கும் பண பலமும், கட்சி நிர்வாகிகள் பலமும் எழில் இனியனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே வேட்பாளர் ரேசில் வக்கீல் எழில் இனியன் முந்திக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எடுக்கப்பட்ட சர்வேக்களில் எல்லாம் ஏற்கனவே நின்றவர்கள், பதவியில் இருந்தவர்கள் யாருக்கும் தராமல் புதியவருக்கு கொடுத்தால் அரக்கோணம் தி.மு.க. வசம் மீண்டும் செல்ல வாய்ப்புள்ளதாக சொல்லக்ப்பகிடுகிறது!

Leave a Response