சமரசம் செய்துகொள்ள ஐசரி கணேஷ் போடும் திட்டம்! பிடி கொடுப்பாரா ஸ்டாலின்?

வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், தாளாளருமானவர் ஐசரி கணேஷ். இவர் நடிகர் மட்டும் தயாரிப்பாளரும் ஆவார். திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், இந்த பத்து வருட காலத்தில் பல தமிழ் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துரை மட்டுமின்றி, அரசியலிலும் கால்பதித்தவர் இந்த ஐசரி கணேஷ். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்து வந்த போது அ.இ.அ.தி.மு.க’வில் இளைஞர் அணியில் பதவி வகித்தார். பின்னர் அதே ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வேல்ஸ் கல்வி குழுமத்தை நிறுவிய பிறகு ஆட்சிக்கு எந்த கட்சி வந்தாலும் அவர்களோடு இணக்கமாக பழகும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொண்டார் ஐசரி கணேஷ். ஆளும் கட்சிக்கு சாதகமாக குரல் கொடுப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டார். பண பலம் கொண்ட ஐசரி கணேஷை, இந்த பத்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க உபயோகித்து கொண்டது.

கலைத்துறையில் நடிகனாக பிரபலமாக வேண்டும் அல்லது சம்பதிக்க வேண்டும் என்ற ஆசை ஐசரி கணேஷுக்கு இல்லை என்றாலும், நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. இந்த ஆசையில் தான் 2015ம் ஆண்டு நடைபெற்ற ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ தேர்தலில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தார், இந்த அணியும் அபார வெற்றி பெற்றது.

நாசர் தலைமையிலான நடிகர் சங்கத்தின் நிர்வாகம் 2019ம் ஆண்டில் முடிவடையும் தருவாயில் இருந்த போது, அச்சங்கத்தின் பொது செயலாளர் விஷாலுக்கும் அதே அணியில் நிர்வாகிகளாக இருந்த நடிகர் உதயா, நடிகைகள் குட்டி பத்மினி, சங்கீதா ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் அந்த அணியில் இருந்து வெளியேறினர்.

உதயா, குட்டி பத்மினி மற்றும் சங்கீதாவின் தந்திரத்தால், விஷாலுக்கும் ஐசரி கணேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி அவர்கள் இருவருக்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது. இந்த பிளவின் காரணமாக 2019ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் விஷால் அங்கம் வகித்து நாசர் தலைமையில் ஒரு அணியும், ஐசரி கணேஷ் அங்கம் வகித்து பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது.

அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க’விற்கு நடிகர் விஷால் மீது இருந்த கோபத்தை தனக்கு சாதகமாகிக் கொண்ட ஐசரி கணேஷ், அப்போதைய ஆளும் கட்சியை வைத்து நடிகர் சங்கத்துக்கு தற்காலிக கமிட்டி ஒன்றை போட முயற்சித்து பிறகு ஒரு தனி அலுவலரை மட்டுமே போட முடிந்தது. நாசர், விஷால், கார்த்தி மற்றும் பல நடிகர்களின் முயற்சியால் நடைபெற்று வந்த நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியை தடுக்க, தமிழக அரசுக்கு புகார் கொடுப்பது, நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது என செய்து வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம், விஷால் தி.மு.க ஆதரவாளர் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திய காரணத்தால் அப்போது ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க’வினருக்கு விஷால் மீதும் நடிகர் சங்கம் நிர்வாகத்தினர் மீதும் அதிருப்தி இருந்தது.

இவ்வளவு எதிர்ப்புகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தியும் மற்றவர்களும் பொறுமையாக எதிர்கொண்டு வந்தார்கள். ஐசரி கணேஷ் மற்றும் அவருடைய அணியினர் தொடுத்த வழக்கின் காரணமாக 2019ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் முடிவு இன்று வரை வெளியிடப்படாமலே உள்ளது.

தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, தி.மு.க ஆட்சியை கைப்பற்றி அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராகியுள்ளார்.

எப்போதும் ஆளும் கட்சியினருடன இணக்கமாக இருக்க விரும்பும் ஐசரி கணேஷ், ஸ்டாலினுடன் அல்லது உதயநிதி ஸ்டாலினுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டார். ஐசரி கணேஷின் இந்த முயற்சி தோல்வியை கண்டது. இருப்பினும் கொரோனா நிதி வழங்குவதற்காக எப்படியோ முதல்வரை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார் ஐசரி கணேஷ். தற்போது அவர் ஆளும் தி.மு.க’வுடன் இணக்கமாக அக்கட்சியின் மகளிர் அணி தலைவி கனிமொழியை நாட முயற்சித்துள்ளார். இந்த முயற்சியின் முதல் படியாக, கனிமொழியின் தனி உதவியாளர் சரவணனின் மகனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். கனிமொழியின் தனி உதவியாளர் சரவணனின் மகன் வேறு யாரும் இல்லை, நடிகர் ‘மெட்ரோ’ பட புகழ் சிரிஷ் தான் ஆவார். ‘மெட்ரோ’ சிரிஷை வைத்து அடுத்து மூன்று படங்களின் ஐசரி கணேஷின் ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உறுதி செய்வதற்காக சிரிஷை தொடர்புகொண்டு குறுந்தகவல் அனுப்பி விசாரித்தோம். அனுப்பிய குறுந்தகவலை படித்த பிறகும் பதில் அளிக்காமல், சிரிஷ் மவுனமாக இருப்பதை பார்க்கும்போது நாம் சொன்ன தகவல் உண்மையானதாக தான் இருக்கும் என்பது நிரூபணமாகிறது.

சிரிஷை வைத்து படம் தயாரிக்க முயற்சிக்கும் ஐசரி கணேஷ், தி.மு.க தலைமையுடனும், தமிழக அரசுடனும் இணக்கமாக வேண்டும் என்ற கனவு, நடிகர் சங்கத்தை அவர் கைப்பற்ற நினைக்கும் முயற்சி பலிக்கிறதா, எப்போதும் உஷாராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஐசரி கணேஷின் முயற்சிக்கு பிடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response