தேர்தலை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தள்ளிப்போடுவதா?- பல்லவன் இல்லம் முன் தொழிலாளர்கள் ஆவேசம்!

சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் 13 முறை நடத்தியும் தீர்வு வரவில்லை. இன்றும் தேர்தலை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தள்ளிப்போடுவதா? என போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேசமடைந்தனர். தலைமைக்கு எதிராக திரண்டு போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி, கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பண பலன்களில் இருந்து ரூ.7 ஆயிரம் கோடியை அரசும், நிர்வாகமும் செலவழித்து விட்டது. அந்த பணத்தை வழங்க வலியுறுத்தி கடந்த மே மாதம் போக்க்உவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்பின்னர் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆகஸ்டு மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

e1664d75-e05b-4818-94a5-1176e742bb33

ஆனால் தமிழக அரசு இதுவரையில் அதற்கான எந்தவித முயற்சியையும் செய்யவில்லை. எனவே பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்த பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் தமிழக அரசின் இதரத் துறை ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.

 

இந்த போராட்டத்தில் சிபிஎம் கட்சியின் சிஐடியூ, திமுகவின் தொமுச, சிபிஐ கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி, மதிமுக, தேமுதிக, விசிக கட்சிகளின் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துக்கொண்டனர். இதையடுத்து இன்று அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

 

பேச்சுவார்த்தையில் ஆர்.கே.நகர் தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் முடிந்தபின்னர் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தொமுச தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறினர். ஆனால் இதை தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

தேர்தல் தான் பேச்சுவார்த்தைக்கு தடை என்றால் இத்தனை மாதங்கள் 13 தடவை பேச்சுவார்த்தை நடத்தியபோது ஏன் அரசு சொன்னபடி நடக்கவில்லை என்று கூறி ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சனையை இப்படி அலைக்கழிப்பது முறையா? பொதுமக்கள் நலன் கருதி காலவரையற்ற போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடாமல் இருப்பதை அரசு சாதகமாக பயன்படுத்தப்பார்க்கிறது என்று ஆவேசத்துடன் கூறிய தொழிலாளர்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

 

சிலர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதில் அந்த வழியாக வந்த அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. ஓட்டுநர் இறங்கி ஓடியதை அடுத்து பேருந்தை போலீஸாரே அப்புறப்படுத்தினர். தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அந்தப்பகுதியே பதற்றத்தில் மூழ்கியது. இதனால் சென்ட்ரலிலிருந்து அண்ணா சாலை வரும் பேருந்துகள் திருப்பி விடப்பட்டது. அண்ணா சாலையிலிருந்து பல்லவன் சாலை வழியாகவும் பேருந்துகள் செல்லவில்லை.

 

மாலை 6 மணிவரை நீடித்த மறியலை போலீஸார் ஒருவாராக கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து போக்குவரத்து சீரானது.

Leave a Response