ரோந்துப் படகு மோதி மீனவர் காயம்- கடலோர காவல்படை விளக்கம்!

ronthu

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நாட்டுப் படகில் மணிகண்டன், நாகேந்திரன், முருகேசன் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மண்டபம் குருசடைத்தீவு அருகே நேற்று காலை 7 மணியளவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்துப் படகு திடீரென வேகமாக வந்து நாட்டுப் படகின் மீது மோதியது.

 

board

இதில் மணிகண்டனின் படகு கடலில் மூழ்கியதால், 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்ற மீனவர்களும், இந்திய கடலோர காவல் படையினரும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நாகேந்திரன் என்ற மீனவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவரை கடலோரக் காவல்படை ஆம்புலன்ஸில் மண்டபம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதுதொடர்பாக, பாம்பன் தெற்குவாடி நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் முனீஸ்வரன் தலைமையில் 9 மீனவர்கள், மண்டபம் இந்திய கடலோர காவல்படை முகாமுக்கு சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தரப்பில், பனி மூட்டத்தால், எதிர்பாராத விதமாக மீனவர் படகில், ரோந்துப் படகு மோதி விட்டது. மேலும் சேதமடைந்து மூழ்கிய படகை மீட்டு சரி செய்து தருவதாக மீனவர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Leave a Response