சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் : ராமேஸ்வரத்தில் காலவரையற்ற போராட்டம் !

ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 31ம் தேதி முதல் காலவரயற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும். விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மின் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
நேற்று கூட ராமேஸ்வர மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களை உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தில் இன்று ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தின் முடிவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வரும் 31ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அன்றைய தினம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Response