தமிழகத்தில் கடும் எதிர்ப்பை மீறி அனுமதிக்கப்பட்ட வி.எச்.பி.யின் ராம ராஜ்ய ரத யாத்திரை பிரசாரம் மேற்கொள்ளாமல் மின்னல் வேகத்தில் மதுரையை நேற்று வந்தடைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ராம ராஜ்யத்தை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கத்துடனான ரத யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் தொடங்கியது. இந்த ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ரத யாத்திரையை தமிழக எல்லையான நெல்லை புளியரையில் மறிக்க சென்ற திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட ஏராளமானோர் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
புளியரையில் போலீஸ் தடையை மீறி நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மறியலில் ஈடுபட முயன்றதால் கைது செய்யப்பட்டார். இதேபோல தமிழக சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இதேபோல் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் இந்த ரத யாத்திரை எங்கும் நிற்காமல் மின்னல் வேகத்தில் மதுரை அய்யர்பங்களா பகுதியை வந்தடைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இன்று இந்த ரதயாத்திரை ராமேஸ்வரம் செல்கிறது.